"கோபாலா...கோவிந்தா' நாம கோஷத்துடன் குமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம் தொடங்கியது

கன்னியாகுமரி மாவட்டத்தில் மகா சிவராத்திரி விழாவையொட்டி சிவாலய ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மகா சிவராத்திரி விழாவையொட்டி சிவாலய ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
இம்மாவட்டத்தில் சிவராத்திரி தினத்தையொட்டி முன்சிறை அருகேயுள்ள திருமலை மகாதேவர் கோயிலில் தொடங்கி திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, திருப்பன்னிப்பாகம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்றிக்கோடு, திருநட்டாலம் ஆகிய இடங்களில் உள்ள 12 சிவாலயங்களுக்கு பக்தர்கள் ஓட்டமாகச் சென்று வழிபடுகின்றனர்.
110 கி.மீ. தொலைவு கொண்ட இந்த சிவாலய ஓட்டத்தில் குமரி மாவட்டம் மட்டுமன்றி கேரள மாநிலத்திலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர்.
ஓட்டத்தை தொடங்கிய பக்தர்கள்: நிகழாண்டு சிவாலய ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. வாகனங்களைப் பயன்படுத்தாமல் நடந்தும், ஓடியும் செல்லும் ஆண் மற்றும் பெண் பக்தர்கள் காவியுடை தரித்து, கையில் விசிறியுடன் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் முன்சிறை அருகேயுள்ள திருமலை மகாதேவர் கோயிலுக்கு வரத் தொடங்கினர்.
அவர்கள் இங்குள்ள மகாதேவரை திரிசித்து விட்டு கோபாலா...கோவிந்தா... என நாம கோஷங்களை சொல்லியவாறு ஓட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக 12 கோயில்களுக்கும் செல்லும் வழிப்பாதைகளிலும், ஆலயப் பகுதிகளிலும் சிவ பக்தர்களே நிறைந்து காணப்பட்டனர்.  இருசக்கர வாகனங்கள் மற்றும் கார், வேன், ஆம்னி பேருந்துகளில் சிவாலய ஓட்டத்தில் ஈடுபடும் பக்தர்கள் திங்கள்கிழமை ஓட்டத்தை தொடங்குகின்றனர்.
சிறப்பு ஏற்பாடுகள்: சிவாலய ஓட்டத்தில் ஈடுபடும் பக்தர்களின் வசதிக்காக ஒவ்வொரு கோயிலிலும் கோயில் நிர்வாகங்கள் சார்பிலும் பக்தர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் மோர், சுக்குநீர், மென்பானங்கள் உள்ளிட்ட குடிநீர் வகைகளும், கஞ்சி, சாதம் உள்ளிட்ட இலவச உணவுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
புழுதி பறக்கும் சாலைகள்: சிவாலய ஓட்டப் பாதைகளில் சாலைகள் பெரும்பாலும் சேதமடைந்து கிடப்பதாலும், சாலைகளில் புழுதி பறப்பதாலும் பக்தர்கள், குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் மிகுந்த கவனத்துடன் செல்வது நல்லது. பக்தர்கள் தலைக்கவசம் அணிந்து செல்வதுடன் குழந்தைகள், முதியவர்கள் முகத்தில் காட்டன் மாஸ்க் கட்டிக் கொள்வதும் பாதுகாப்பானதாக இருக்கும் என ஆன்மிக அன்பர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com