"பிரதமர் நிகழ்ச்சியில் பாதுகாப்பு வீரர்கள் என்னை தடுத்தது பெரிய விஷயம் அல்ல'
By DIN | Published On : 04th March 2019 06:13 AM | Last Updated : 04th March 2019 06:13 AM | அ+அ அ- |

கன்னியாகுமரியில் பிரதமர் மற்றும் முதல்வர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில், பாதுகாப்பு வீரர்கள் என்னை தடுத்தது பெரிய விஷயம் அல்ல என்றார் தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய்சுந்தரம்.
கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி பெருங்கொடை விழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் கலந்துகொண்ட அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: குமரியில் சுமார் 1.5 லட்சம் மீனவர்கள் உள்ளனர். பேரிடர் காலங்களில் மீனவர்களை மீட்பதற்காக, ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைக்க வேண்டுமென பிரதமரிடம் தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கன்னியாகுமரியில் பிரதமர், முதல்வர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில், பாதுகாப்பு வீரர்கள் என்னை தடுத்தது பெரிய விஷயம் அல்ல. ஏனெனில், பாதுகாப்புக்கு இருக்கும் போலீஸார் மாறிக் கொண்டே இருப்பதால், அவர்களுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை.
அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் சேர்ந்து மெகா கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணி வெற்றிக் கூட்டணி. தேமுதிகவை கூட்டணியில் இணைக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
டாஸ்மாக் ஒப்பந்தப்புள்ளி கோரலில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததால், அமைச்சர் அதை நிறுத்தி வைத்துள்ளார். இதில் யாருடைய தலையீடும் இல்லை. விரைவில் முறைப்படி ஒப்பந்தப்புள்ளி கோரப்படும் என்றார் அவர்.