சுடச்சுட

  


  கொல்லங்கோடு ஸ்ரீபத்ரகாளி அம்மன் கோயிலில் திங்கள்கிழமை (மார்ச் 18) பரணேற்று திருவிழா நடைபெறுகிறது.
  கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற இக்கோயிலில் 24 ஆண்டுகளுக்குப் பின் நிகழாண்டு பரணேற்றுத் திருவிழா நடைபெறுகிறது. இத்திருவிழா இம்மாதம் 7 ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் காலையில் அம்மன் புறக்கால் கிணற்றை வலம் வந்து பரணேற்று நிலத்துக்கு எழுந்தருளினார். தொடர்ந்து பரணேற்று நிலத்தில் பரணை நிறுவுவதற்கான இடம், தற்காலிக கோயில் அமைக்கும் இடம், கொடிமரம் அமைக்கும் இடம் ஆகியவை தலைமை பூசாரியால் சூலம் எய்து இடம் தேர்வு செய்யப்பட்டது. 
  அன்றைய தினம் நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் தற்காலிக கோயிலில் எழுந்தருளினார். இதையடுத்து, கொடியேற்றும் வைபவமும் நடைபெற்றது. விழா நாள்களில் தினமும் சிறப்பு பூஜைகள், சமூக விருந்து, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
  (மார்ச் 17) மாலை 6 மணிக்கு பரணேற்று களத்தில் லட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறும். இதனை திரைப்பட நடிகர் சுரேஷ்கோபி எம்.பி. தொடங்கி வைக்கிறார். இரவு 12.45 மணிக்கு அம்மன் பரணில் எழுந்தருளுகிறார். இதைத் தொடர்ந்து களம் காவல் நடைபெறுகிறது.
  சிறப்பு நிகழ்வான பரணேற்று விழா திங்கள்கிழமை (மார்ச் 18) நடைபெறுகிறது. இதையொட்டி, காலை 7 மணிக்கு பத்ரகாளி அம்மன் தாருகனை வதம் செய்யும் நிகழ்வான நிலத்தில் போர் நடைபெறுகிறது. பிற்பகல் 1 மணிக்கு குருசி பூஜையுடன் விழா நிறைவடைகிறது.
  திருவிழாவை காண குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கேரளத்திலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இவ்விழாவையொட்டி தமிழகம், கேரளத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வசதிக்காக அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai