களியல்-அழகியபாண்டியபுரம் குடிநீர் திட்ட குழாய் அமைக்கும் பணி நிறுத்தம்

களியல்-அழகியபாண்டிய புரம் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு குழாய் பதிக்கும் பணி பொதுமக்கள் எதிர்ப்பால்

களியல்-அழகியபாண்டிய புரம் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு குழாய் பதிக்கும் பணி பொதுமக்கள் எதிர்ப்பால் இரண்டாவது முறையாக திங்கள்கிழமையும் நிறுத்தப்பட்டது.
குமரி மாவட்டம் கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் 
குடிநீர் வழங்கும் வகையில் ரூ. 110 கோடி மதிப்பில் திற்பரப்பு அருவி அருகே களியல் பகுதியில் கோதையாற்றிலிருந்து தண்ணீர் வழங்கும் வகையில் திட்டப் பணிகள்  தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் நடைபெற்று வருகிறது.  இத்திட்டத்துக்கு, திற்பரப்பு அருவியின் மேல்பகுதியிலிருந்து தண்ணீர் எடுக்க அப்பகுதி மக்களும், அரசியல் கட்சியினரும் ஆட்சேபம் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக சட்டப்பேரவை உறுப்பினர் மனோ தங்கராஜ் உள்பட இருவர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இத்திட்டத்திற்காக களியல் பகுதியில் கோதையாற்றின் கரையில் கிணறு அணைக்கும் பணி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் களியல் பகுதியிலிருந்து குலசேகரம் வரையிலான இடங்கள் தவிர இதரப் பகுதிகளில் குழாய் பதிக்கும் பணிகளும், நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கும் பணிகளும் நிறைவடைந்துள்ளன.
சாலை உடைப்பு:  இதனிடையே, 2 மாதங்களுக்கு முன்பு குலசேகரம் கான்வென்ட் சந்திப்பில் குழாய் பதிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பணிக்காக சாலையை உடைத்து குழி தோண்டு வதற்கு பொதுமக்கள் ஆட்சேபம் தெரிவித்ததால் குழாய் பதிக்கும் பணிகள் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில் திங்கள்கிழமை குலசேகரம் அருகே உண்ணியூர்கோணம் பகுதியில்  குழாய் பதிக்கும் வகையில் ஜேசிபி இயந்திரம் மூலம் குழி தோண்டும் பணிகள் நடைபெற்றன. இதற்கு பொதுமக்கள், பாஜக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திமுக உள்ளிட்ட கட்சியினர் திரண்டு ஆட்சேபம் தெரிவித்ததால் அப்பணி நிறுத்தப்பட்டது.
பேச்சுவார்த்தை: தகவலறிந்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து,
பொதுமக்கள், அரசியல் கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் புதிதாக அமைக்கப்பட்ட சாலையை சேதப்படுத்தக் கூடாது என்றும், குழாய் பதிக்கும் பணியினை தண்ணீர் எடுக்கப்படும் இடத்திலிருந்து தொடங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.இதையடுத்து அப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, தோண்டப்பட்ட குழியும்  மூடப்பட்டதையடுத்து கலைந்து சென்றனர். 
கூட்டுக் குடிநீர்திட்டத்திற்கு திற்பரப்பு அருவிக்கு பாதிப்பில்லாத வகையில் அருவியின் கீழ் பகுதியில் தடுப்பணை அமைத்து தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும். குழாய் பதிக்கும் பணிக்காக புதிதாக சீரமைக்கப்பட்ட சாலையை சேதப்படுத்தக் கூடாது என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com