கொல்லங்கோடு கோயில் பரணேற்று விழாவில் தாருகன் வதம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு பரணேற்றுத் திருவிழாவில் திங்கள்கிழமை தாருகனை

கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு பரணேற்றுத் திருவிழாவில் திங்கள்கிழமை தாருகனை பத்ரகாளி வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
கொல்லங்கோடு பத்ரகாளி அம்மனுக்கு வட்டவிளையில் மூலக் கோயிலும், வெங்கஞ்சியில் தூக்க நேர்ச்சை நடத்த மற்றொரு கோயிலும் உள்ளது. வெங்கஞ்சி கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பரணி நாளில் வரலாற்றுச் சிறப்புமிக்க தூக்க நேர்ச்சை நடைபெற்று வருகிறது. இதில் திருமணமான பெண்கள் குழந்தை வரம் வேண்டியும், குழந்தைகளை நோய்களிலிருந்து காப்பாற்ற வேண்டியும் தூக்க நேர்ச்சை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், மூலக்கோயில் அருகே 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தாருகனை பத்ரகாளி அம்மன் வதம் செய்யும் நிகழ்வான பரணேற்றுத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. கடந்த முறை பல்வேறு காரணங்களால் பரணேற்று விழா நடத்த முடியாததையடுத்து, 24 ஆண்டுகளுக்குப் பின் நிகழாண்டு இவ்விழா கடந்த 7ஆம் தேதி துவங்கியது. விழாவின் முதல் நாள் அம்மன் புறக்கால் கிணற்றை வலம் வந்து, பரணேற்று நிலத்துக்கு எழுந்தருளும் சடங்கு நடைபெற்றது. தொடர்ந்து பரணேற்று நிலத்தில் பரணை நிறுத்துவதற்கான இடத்தையும், தற்காலிக கோயில் அமைப்பதற்கான இடத்தையும், கொடிமரம் அமைப்பதற்கான இடத்தையும் கோயில் தலைமை பூசாரி சூலம் எய்து தேர்வு செய்தார். இதைத் தொடர்ந்து, தாற்காலிக கோயில் அமைக்கப்பட்டு, அன்றைய தினம் நள்ளிரவு12 மணிக்கு அம்மன் தற்காலிக கோயிலில் எழுந்தருளினார். தொடர்ந்து திருக்கொடியேற்றுதலும் நடைபெற்றது.
தொடர்ந்து விழா நாள்களில் தினமும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து 11ஆம் நாள் விழாவான ஞாயிற்றுக்கிழமை மாலையில் பரணேற்று களத்தில் லட்ச தீபம் ஏற்றப்பட்டது. இதை மிசோரம் மாநில முன்னாள் ஆளுநர் கும்மனம் ராஜசேகரன், நடிகரும் எம்.பி.யுமான சுரேஷ்கோபி ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
அன்றிரவு 12.45 மணிக்கு மேல் அம்மன் பரணில் எழுந்தருளினார். தொடர்ந்து திங்கள்கிழமை அதிகாலை 2 மணிக்கு மேல் களம் காவல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, 52 அடி உயரமுள்ள பரணில் பத்ரகாளி அம்மனும், எதிரில் 40 அடி உயரமுள்ள பரணில் தாருகனும் அமர்ந்து போருக்கான வாக்குவாதம் நடைபெற்றது. இதில் எந்த முடிவும் எட்டப்படாததால், நிலத்தில் போர் செய்ய முடிவு செய்யப்பட்டு அதிகாலை 4 மணியளவில் அம்மனும் தாருகனும் பரணிலிருந்து கீழே இறங்கினர். காலை 7 மணி முதல் இருவருக்கும் நிலத்தில் (தரையில்) போர் நடைபெற்றது. இதில் 3ஆவது முறை நடைபெற்ற போரில் தாருகனுக்கு வெற்றி கிட்டாததையடுத்து, கோபத்தில் தனது கையிலிருந்த கதாயுதத்தை தரையில் வீசி உடைத்தார். இந்த வகையில் 6 முறை நேருக்கு நேர் நடந்த போரில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதையடுத்து, களத்தில் சிவபெருமானாக உருவகப்படுத்தப்பட்டிருந்த முதியவரிடம் சென்று ஆசி பெற்ற பத்ரகாளி, அதன்பின்னர் 7 ஆவது முறையாக போரிட்டு தாருகனை வதம் செய்தார். பின்னர் மதியம் குருசி பூஜையுடன் விழா நிறைவடைந்தது.
இந்த நிகழ்ச்சியை காண கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கேரளத்திலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். மேலும், பக்தர்களின் வசதிக்காக தமிழக, கேரள அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com