குருசுமலை திருப்பயணம்: 31 இல் தொடக்கம்

குருசுமலையில் நிகழாண்டு திருப்பயணம்  இம்மாதம்   31 ஆம் தேதி தொடங்குகிறது.

குருசுமலையில் நிகழாண்டு திருப்பயணம்  இம்மாதம்   31 ஆம் தேதி தொடங்குகிறது.
   குமரி கேரள எல்லைப் பகுதியான வெள்ளறடை-பத்துகாணியில்  சுமார் 3 ஆயிரம் அடி உயரம் கொண்ட குருசுமலை உச்சியில் திருச்சிலுவை நிறுவப்பட்டுள்ளது.  ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்களின் தவக்கால நாள்களையொட்டி மலை   அடிவாரத்திலிருந்து மலை உச்சியிலுள்ள திருச்சிலுவையை நோக்கி திருப்பயணம் நடத்தப்படுகிறது. இத்திருப்பயணத்தில் கேரளம் மற்றும் குமரி மாவட்டத்திலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்கின்றனர்.   நிகழாண்டு திருப்பயணம் மார்ச் 31,  ஏப்ரல் 7 ஆம் தேதி வரையும் பின்னர் ஏப்ரல் 18,19 ஆகிய தேதிகளிலும் நடைபெறுகிறது.
  இது குறித்து குருசுமலை திருத்தல இயக்குநர்  வின்சென்ட் கே. பீட்டர் செய்தியாளர்களிடம் கூறியது; நிகழாண்டு திருப்பயணத்தின் முன்னோட்டமாக  மார்ச் 30 ஆம் தேதி கடையாலுமூடு தேவாலயத்திலிருந்து குருசுமலை அடிவாரம் வரை மாரத்தான் ஓட்டம் நடைபெறுகிறது. 31 ஆம் தேதி பிற்பகல்  1 கி.மீ.  தொலைவு கொண்ட கொடிப்பயணம் வெள்ளறடையிலிருந்து குருசுமலை வரை நடைபெறுகிறது.  
   உலக அமைதியை வலியுறுத்தியும், கின்னஸ் சாதனைக்காகவும் நடைபெறும் இந்தப் பயணத்தில்  பல்வேறு இளைஞர் அமைப்புகள் பங்கேற்கின்றன. தொடர்ந்து நெய்யாற்றின்கரை மறை மாவட்ட ஆயர் வின்சென்ட் கே. சாமுவேல் கொடியேற்றி திருப்பயணத்தைத் தொடங்கி வைக்கிறார். பின்னர் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கேரள மாநில அமைச்சர் கடம்பள்ளி சுரேந்திரன், தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி என். தளவாய் சுந்தரம், அதிமுக மேற்கு மாவட்டச் செயலர்  ஜான் தங்கம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். 
திருப்பயண நாள்களில் காலை முதல் இரவு வரை மலை அடிவாரத்திலும், மலை உச்சியிலும் திருப்பலி, மறையுரை, ஜெபவழிபாடு நடைபெறுகின்றன. தமிழ், மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் நடைபெறும் இத்திருப்பலிகளில்  பல்வேறு சபைப் பிரிவுகளைச் சேர்ந்த அருள்பணியாளர்கள், போதகர்கள் பங்கேற்கின்றனர். திருப்பயணத்தில் பங்கேற்கும் மக்களின் வசதிக்காக  சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்றார்.  
செய்தியாளர்கள் சந்திப்பின் போது, அருமனை பாக்கியபுரம் பங்குப் பணியாளர் மரிய வின்சென்ட், திருப்பயண ஒருங்கிணைப்பாளர்கள் ராஜேந்திரன், கடையல் மணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com