குமரி மக்களுக்கு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தியவர் பொன்.ராதாகிருஷ்ணன்: மத்திய அமைச்சர் பியூஷ்கோயல்
By கன்னியாகுமரி | Published On : 28th March 2019 06:59 AM | Last Updated : 28th March 2019 07:23 AM | அ+அ அ- |

குமரி மக்களுக்கு பல சிறப்பான திட்டங்களை செயல்படுத்தியவர் மத்திய இனை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் என்றார் மத்திய ரயில்வே துறை அமைச்சரும், தமிழக பாஜக பொறுப்பாளருமான பியூஷ் கோயல்.
நாகர்கோவில் நாகராஜா கோயில் திடலில் புதன்கிழமை இரவு நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது; தமிழகத்தில் மிகப்பெரிய, சிறப்பான கூட்டணி அமைந்துள்ளது. இந்தக் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும். இந்த மண்ணின் மைந்தரான மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு சேவை, என்ற வார்த்தையை தவிர அவருக்கு வேறு எதுவும் தெரியாது. மக்களுக்காக அவர் இரவு பகலாக உழைத்துக்கொண்டிருக்கிறார்.
தென்கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரிக்கு வந்த விவேகானந்தரின் இயற்பெயர் நரேந்திரன். அவர் எவ்வித பாகுபாடும் இல்லாமல் பொதுமக்களுக்காக தனது வாழ்வை அர்ப்பணித்தவர். அதே போல் அவரது பெயரை தாங்கியுள்ள பிரதமர் நரேந்திரமோடியும் நாட்டு மக்களுக்காக எந்தவித பாகுபாடும் இல்லாமல் பொதுமக்களுக்கு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பொன்.ராதாகிருஷ்ணன் குமரி மாவட்டத்துக்கு ரூ. 40 ஆயிரம் கோடி மதிப்பில் வளர்ச்சித்திட்டங்களை கொண்டு வந்துள்ளார் என்றார் அவர்.
கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் ,அதிமுக மாவட்டச் செயலர்கள் எஸ்.ஏ.அசோகன், ஜான்தங்கம், பாஜக மாவட்டத் தலைவர் முத்துகிருஷ்ணன், மூத்த தலைவர் எம் ஆர் காந்தி உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...