வண்டநேரி குளத்திலிருந்து வீணாக திறக்கப்படும் தண்ணீர்: வெள்ளமடம் விவசாயிகள் கவலை

வெள்ளமடம் வண்டநேரி குளத்திலிருந்து தண்ணீர் வீணாக வெளியேற்றப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

வெள்ளமடம் வண்டநேரி குளத்திலிருந்து தண்ணீர் வீணாக வெளியேற்றப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
நாகர்கோவில்- தோவாளை தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளமடம் சகாய நகர் விலக்கு அருகே வண்டநேரி குளம் உள்ளது. இந்தக் குளத்துக்கு தோவாளை சானலில் இருந்து தண்ணீர் வந்துசேர்கிறது. இந்தத்  தண்ணீர் மூலம் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல் (கன்னிப்பூ, கும்பப்பூ) விளைகிறது.  
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு கும்பப்பூ நெல் அறுவடை முடிவடைந்தது. மேலும், குளத்தில் உள்ள தண்ணீர் இருப்பு மற்றும் கோடை மழையை எதிர்பார்த்து கன்னிப்பூ நெல் சாகுபடி சில வாரங்களில் தொடங்கப்பட உள்ளது. இதனிடையே,  குளத்திலிருந்து விளை நிலத்துக்குச் செல்லும் சிறு வாய்க்கால் மூலம் தண்ணீர் வீணாக வெளியேற்றப்பட்டு வெள்ளமடம் வழியாக புத்தனார் கால்வாயில் கலக்கிறது.
இதுகுறித்து, அப்பகுதியைச் சார்ந்த விவசாயி செந்தில் கூறியது:
வெள்ளமடம் பகுதி விவசாயிகள் வண்டநேரி குளத்து நீரை நம்பியே விவசாயம் செய்துவருகிறோம்.  தோவாளை சானல் மூலம் கடைசியாக தண்ணீர் வந்து சேரும் இந்த குளத்தில் சேமிக்கப்படும் தண்ணீரை சிக்கனமாக விவசாயத்துக்கு பயன்படுத்துகிறோம்.
இந்நிலையில், கன்னிப்பூ சாகுபடி தொடங்குவதற்கு முன்பே இரு தினங்களாக குளத்து நீர் திறக்கப்பட்டு வீணாக  புத்தனார் கால்வாய்க்குச் செல்கிறது.  இதனால், சுமார் 50 ஏக்கர் பரப்பிலான கன்னிப்பூ சாகுபடி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. குளத்து தண்ணீர் வீணாவதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 
குளத்தில் மீன்பிடிப்பதற்காக சமூக விரோதிகள் தண்ணீரை திறந்துவிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு அதிகாரிகள் உடனடியாக தீர்வு காணாவிடில், விவசாயிகளை திரட்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கவுள்ளோம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com