தேங்காய்ப்பட்டினம் கடலில் பத்ரேஸ்வரி அம்மனுக்கு ஆறாட்டு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
By DIN | Published On : 16th May 2019 07:39 AM | Last Updated : 16th May 2019 07:39 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை அருகேயுள்ள கூட்டாலுமூடு தேவஸ்தானம் பத்ரேஸ்வரி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி, தேங்காய்ப்பட்டினம் கடலில் அம்மனுக்கு ஆறாட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
கூட்டாலுமூடு தேவஸ்தானம் அம்மன் கோயில் திருவிழா கடந்த 6ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி,கோயிலில் தினமும் பல்வேறு பூஜைகள் நடைபெற்று வந்தன. 10ஆம் திருநாளான செவ்வாய்க்கிழமை அம்மனை கடலில் ஆறாட்டும் வைபவம் நடைபெற்றது. இதற்காக, மாலை 4 மணி அளவில் 7 யானைகள் மீது அம்மன் விக்ரகங்களை வைத்து, கோயில் வளாகத்திலிருந்து தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுக கடற்கரைப் பகுதிக்கு பவனியாக எடுத்துச்செல்லப்பட்டது. அப்போது, வழிநெடுகிலும் சிங்காரிமேளம், நாகசுரம், பஞ்சவாத்தியங்கள் முழங்க, பூக்காவடி மற்றும் மூன்று ரதங்களுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பவனி சென்றனர்.
பவனியானது அம்சி, முக்காடு,தேங்காய்ப்பட்டினம் சந்திப்பு வழியாக மின்பிடி துறைமுகப் பகுதியை மாலை 6 மணிக்கு அடைந்தது. அங்கு, அம்மனுக்கு தந்திரிகள் சிறப்புப் பூஜைகள் செய்து, கடலில் ஆறாட்டினர். பின்பு, மீண்டும் பவனியாக கோயில் வளாகத்துக்கு அம்மன் புறப்பாடு நடைபெற்றது.
தொடர்ந்து, இரவு 7 மணிக்கு இந்து சமய மாநாடு, இரவு 9 மணிக்கு வாணவேடிக்கை ஆகியவை நடைபெற்றன. நள்ளிரவு 12 மணிக்கு திருக்கொடியிறக்கம் நடைபெற்றது.
இதில்,தேவஸ்தானம் தலைவர் கேசவதாசன், செயலர் சந்திரகுமார், துணைத் தலைவர் குமார், பொருளாளர் செளந்தரராஜன், துணைச் செயலர் துளசிதாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.