முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை 45 நிமிடங்களுக்கு ஒருமுறை முன்னணி நிலவரம்: ஆட்சியர்
By DIN | Published On : 18th May 2019 04:38 AM | Last Updated : 18th May 2019 04:38 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் 45 நிமிடங்களுக்கு ஒருமுறை அறிவிக்கப்படும் என்றார் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரசாந்த் மு. வடநேரே.
இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி வரும் 23 ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும். முதலில் அஞ்சல் வாக்குகள் எண்ணப்படும். தொடர்ந்து, 8.30 மணிக்கு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கும். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் தனித்தனி அறைகளில் எண்ணப்படும்.
குமரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1,694 வாக்குச்சாவடிகளில் ஒரு தொகுதிக்கு 310 வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளன. குளச்சல் மற்றும் கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கைக்கு தலா 12 மேஜைகளும், கிள்ளியூர், பத்மநாபபுரம், நாகர்கோவில், விளவங்கோடு ஆகிய தொகுதிகளுக்கு தலா 10 மேஜைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 28 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அதன்பிறகு, வி.வி.பேடில் பதிவான வாக்குகள் எண்ணி சரிபார்க்கப்படும். அதைத்தொடர்ந்தே, இறுதி முடிவு அறிவிக்கப்படும். ஒவ்வொரு சுற்றும் சுமார் 45 நிமிடங்களில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு நிறைவு பெற்றவுடன் முன்னணி நிலவரம் அறிவிக்கப்படும்.
வாக்குப்பதிவு நிலவரம் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்படுவதுடன், கரும்பலகையிலும் எழுதப்படும். அதேபோல, சுவிதா ஆப் மூலமும் முடிவுகள் வெளியிடப்படும். முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு அறிவிக்கப்பட்ட பிறகுதான், அடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கும். அனைத்து சுற்றுகளும் நிறைவடைந்த பிறகு, விளவங்கோடு தொகுதியில் உள்ள 2 வாக்குச்சாவடிகள், கிள்ளியூரில் உள்ள ஒரு வாக்குச்சாவடியின் வி.வி. பேடில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.
மேலும், ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு 5 வாக்குச்சாவடி வீதம் மொத்தம் 30 வி.வி.பேடில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி, தேர்தல் பொதுப் பார்வையாளர் வரும் 22 ஆம் தேதி குமரி வருகிறார். அவர், வாக்கு எண்ணிக்கை முழுமையாக நிறைவடைந்த பிறகுதான் செல்வார் என்றார் அவர்.
முன்னதாக, வாக்கு எண்ணும் பணியை சரியான முறையில் மேற்கொள்ள போதுமான ஒத்துழைப்பு வழங்குவது குறித்தும், வாக்கு எண்ணிக்கை முகவர்கள், வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் அடையாள அட்டை பெறுவதற்கான நடைமுறைகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடந்துகொள்ளும் வழிமுறைகள் குறித்து அனைத்து கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆட்சியர் ஆலோசனை மேற்கொண்டார்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா. ரேவதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) மா. சுகன்யா, (தேர்தல்) சிவகுமார், அரசியல் கட்சிகளின் சார்பில், வழக்குரைஞர் கே.எல்.எஸ். ஜெயகோபால் (அதிமுக), வழக்குரைஞர் பி. லீனஸ்ராஜ் (திமுக), சி. நாகராஜன் (பாஜக), டி. சேவியர்ஜெயசதீஸ் (காங்கிரஸ்), சுயேச்சை வேட்பாளர் நாகூர் மீரான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.