முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
குமரி பகவதியம்மன் கோயில் வைகாசி விசாகத் திருவிழா தேரோட்டம்
By DIN | Published On : 18th May 2019 04:40 AM | Last Updated : 18th May 2019 04:40 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயில் வைகாசி விசாகத் திருவிழா தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இத்திருவிழா கடந்த 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் சிறப்பு அபிஷேகம், சமய உரை, அன்னதானம், கலை நிகழ்ச்சிகள், அம்மன் வீதியுலா உள்ளிட்டவை நடைபெற்றன. 9ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகமும், அதைத்தொடர்ந்து, காலை 8 மணியளவில் தேரோட்டமும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், தேவசம் போர்டு இணை ஆணையர் ம. அன்புமணி, நாகர்கோவில் தேவசம் தொகுதி கண்காணிப்பாளர் எஸ். ஜீவானந்தம், பகவதியம்மன் கோயில் மேலாளர் பி. ஆறுமுக நயினார், மலேசிய பக்தர் ஆர்.எஸ். தனேந்திரன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
தேர் ரதவீதியைச் சுற்றி வலம் வந்தபோது ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு நேர்ச்சை செலுத்தி வழிபட்டனர். பிற்பகல் 12.30 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. தொடர்ந்து, அன்னதானம், மாலை 6.30 மணியளவில் மண்டகப்படி, 6.45 மணியளவில் சமய உரை, இரவு 9 மணியளவில் வெள்ளிக் கலைமான் வாகனத்தில் அம்மன் வீதியுலா ஆகியவை நடைபெற்றன.
தெப்பத் திருவிழா: 10ஆம் நாள் திருநாளான சனிக்கிழமை (மே 18) அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7 மணியளவில் அம்மன் ஆறாட்டுக்கு எழுந்தருளல், 10 மணியளவில் சிறப்பு அபிஷேகம், பகல் 12 மணியளவில் அன்னதானம், மாலை 5 மணியளவில் மண்டகப்படி, 6 மணியளவில் சமய உரை, இரவு 9.30 மணியளவில் அம்மன் தெப்பத்துக்கு எழுந்தருள, தெப்பத் திருவிழா நடைபெறுகிறது.
வேளிமலை குமாரசுவாமி கோயிலில்...
குமாரகோவில், வேளிமலை அருள்மிகு குமாரசுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இத்திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா மே 9 ஆம் தேதி திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் நாள்களில் கணபதி ஹோமம், தீபாராதனை, கலச பூஜை, கலச அபிஷேகம், திருவிளக்கு பூஜை, சாயாராட்சை தீபாராதனை, பூ பல்லக்கில் சுவாமி- அம்பாள் எழுந்தருளல் ஆகியவை நடைபெற்றது. 9-ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை காலை 4 மணிக்கு
ஸ்ரீபூதபலி, அபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. காலை
7 மணிக்கு அலங்கரிக்கபட்ட சின்ன தேரில் விநாயகரும், பெரிய தேரில் சுவாமி- அம்பாள் எழுந்தருளினர். தொடர்ந்து காலை 8.15 மணிக்கு பக்தர்கள் தேர் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் தேவசம் தொகுதி கோயில் கண்காணிப்பாளர் வி.என்.சிவகுமார், கோயில் மேலாளர் அ.மோகனகுமார், முன்னாள் விழாக்குழு தலைவர் ப.ரமேஷ், விழா கமிட்டி நிர்வாகிகள் பிரசாத், மாதவன்பிள்ளை சுனில்குமார், ஸ்ரீகுமார், செந்தில் , குமாரசுவாமி, வேல்முருகன் சேவா சங்க நிர்வாகிகள் உள்பட திரளானோர் பங்கேற்றனர்.
தேர் நிலைக்கு வந்த பின்பு விநாயகர், சுவாமி- அம்பாள் காவடி மண்டபத்தில் எழுந்தருளினர். மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் விநாயகரும், மயில் வாகனத்தில் சுவாமியும், கிளி வாகனத்தில் அம்பாளும் எழுந்தருள மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் கோயிலுக்கு எடுத்து சென்றனர்.
மாலை 6.30 மணிக்கு அலங்கார தீபாரதனையும், இரவு 8.30 மணிக்கு பள்ளி வேட்டையும் நடைபெற்றது. 10-ஆம் திருநாளான சனிக்கிழமை(மே 18) காலை 9 மணிக்கு மூலவருக்கும், அம்பாளுக்கும் ஆறாட்டு நடைபெறுகிறது.