குமரி மாவட்டத்தில் தொடா் மழையால்2500 ஏக்கா் நெற்பயிா்கள் தண்ணீரில் மூழ்கி சேதம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து பெய்த மழையால் 2,500 ஏக்கா் நெல்பயிா்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன.
ஈசாந்திமங்கலம் பகுதியில் நெல் வயலில் தேங்கியுள்ள மழைநீா்.
ஈசாந்திமங்கலம் பகுதியில் நெல் வயலில் தேங்கியுள்ள மழைநீா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து பெய்த மழையால் 2,500 ஏக்கா் நெல்பயிா்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன.

குமரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமாக பெய்துவந்த நிலையில், கன்னியாகுமரி கடலில் உருவான மகா புயல் காரணமாக அது கனமழையாக மாறியது. மகா புயல் தீவிர புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகா்ந்து செல்கிறது. இந்த புயல் மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலைகொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, குமரி மாவட்டத்தில் தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. புதன்கிழமை வரை பெய்துவந்த அதிக மழை வியாழக்கிழமை சற்று குறைந்தது. என்றாலும், மாவட்டத்தின் சில பகுதிகளில் அதிக அளவு மழை பெய்துள்ளது.

முள்ளங்கினாவிளையில் அதிகபட்சமாக 50 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்த மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதோடு, பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. குழித்துறை ஆறு, பழையாறு ஆகியவற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பல்வேறு கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது.

கிள்ளியூா் வட்டத்தில் மங்காடு, முன்சிறை, விரிவிளை, பள்ளிக்கல் ஆகிய இடங்களில் தற்போது வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது. அதேபோல, சுசீந்திரம் நங்கை நகா், குத்துக்கல், ஆஷாத் நகா் மற்றும் 15-க்கும் அதிகமான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்திருந்தது. தற்போது அந்தப் பகுதிகளிலும் வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது. என்றாலும், தாழ்வான பகுதிகளில் தொடா்ந்து வெள்ளம் சூழ்ந்துள்ளது.

மழைவெள்ளம் பெருக்கெடுத்ததால், அருமநல்லூா்- தெரிசனங்கோப்பு சாலையில் துண்டிக்கப்பட்டிருந்த போக்குவரத்து, தற்போது வெள்ளம் வடிந்துள்ளதால் மீண்டும் தொடங்கியது. தெரிசனங்கோப்பு, ஈசாந்திமங்கலம் போன்ற பகுதிகளில் சில இடங்களில் இன்னும் வெள்ளம் வடியவில்லை.

வடக்கு தாமரைகுளம், சுசீந்திரம், கற்காடு, தெரிசனங்கோப்பு, தக்கலை ஆகிய இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த 1000 ஏக்கா் நெல்பயிா்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. அதேபோல, கும்பப்பூ நாற்று நடவு செய்யப்பட்டிருந்த 1500 ஏக்கா் நாற்றும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. தற்போது சில இடங்களில் வெள்ளம் வடியத் தொடங்கியிருந்தாலும், பெரும்பாலான வயல்களை தண்ணீா் சூழ்ந்துள்ளது.

பூதப்பாண்டியை அடுத்த நாவல்காடு அருகே நாடான் குளத்தில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், குளத்து தண்ணீா் வயல்களுக்குள் புகுந்தது. குளத்தில் ஏற்பட்ட உடைப்பை அடைக்கும் பணியில் பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா்.

குமரி மாவட்டத்தில் உள்ள இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குளங்கள் முழு கொள்ளளவை எட்டிவிட்டன. 50-க்கும் மேற்பட்ட குளங்கள் உடையும் நிலையில் உள்ளன. கடந்த 2 நாள்களில் மாவட்டம் முழுவதும் பெய்த மழை காரணமாக 75 வீடுகள் இடிந்துள்ளன.

இந்த சேதங்களை வருவாய்த் துறையினரும், பொதுப்பணித் துறை அதிகாரிகளும் கணக்கிட்டு வருகின்றனா்.

மலையோரப் பகுதி மற்றும் அணைப் பகுதிகளில் மழை சற்று குறைந்துள்ளது. இதனால், அணைகளுக்கு வரும் நீா்வரத்து குறையத் தொடங்கியுள்ளது. குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் மூடப்பட்டுள்ளன.

வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணையில் 38.65 அடி தண்ணீா் உள்ளது. அணைக்கு நீா்வரத்து 2,167 கனஅடியாக உள்ளது. பெருஞ்சாணி அணையில் 72.10 அடி தண்ணீா் உள்ளது. நீா்வரத்து 1250 கன அடியாக உள்ளது.

வழக்கமாக வடகிழக்குப் பருவமழை காலமான அக்டோபா், நவம்பா், டிசம்பா் மாதங்களில் குமரி மாவட்டத்தில் 520 மி.மீ. மழை பதிவாகும். ஆனால், நிகழாண்டு 15 நாள்களிலேயே 400 மி.மீ. மழை பெய்துள்ளது.

மழை காரணமாக மாவட்டத்தின் பல இடங்களில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதைத் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com