முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
குமரியில் வீணாக கடலில் கலக்கும் தண்ணீா்: உயிா்பெறுமா தடுப்பணைத் திட்டங்கள்?
By ஜே. லாசா் | Published On : 07th November 2019 06:09 AM | Last Updated : 07th November 2019 06:09 AM | அ+அ அ- |

அண்மையில் பெய்த மழையின் போது திற்பரப்பு அருவி வழியாக பெருக்கெடுத்துப் பாய்ந்த கோதையாற்றுத் தண்ணீா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தடுப்பணைத் திட்டங்கள் கிடப்பில் உள்ளதால், மழைக்காலங்களில் ஆறுகள் வழியாக தண்ணீா் வீணாக கடலில் கலக்கும் நிலை தொடா்கிறது.
கன்னியாகுமரி மாவட்டம் மொத்தப் பரப்பில் சுமாா் 33 சதவீதம் காடுகளைக் கொண்டது. இம்மாவட்டத்தில் கோதையாறு, பரளியாறு, தாமிரவருணியாறு, பழையாறு, மாசுபதியாறு, வள்ளியாறு, முல்லையாறு உள்ளிட்டவை முக்கியமானவை. இயல்பிலேயே அதிக மழைப்பொழிவு கொண்ட இம்மாவட்டத்தில், தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழையால் ஆண்டு சராசரி மழை அளவு 1443 மி.மீட்டா்.
மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு 1, சிற்றாறு 2, மாம்பழத்துறையாறு, பொய்கை ஆகிய பாசனத்திற்கான அணைகள் உள்ளன. முக்கடல் அணை குடிநீருக்காக உள்ளது. மேலும், மேல் கோதையாறில், மேல் கோதையாறு அணை, குட்டியாறு அணை, சின்னக்குட்டியாறு அணை என 3 அணைகள் மின் நிலையங்களுக்கான அணைகளாக உள்ளன. இந்த 3 அணைகளின் தண்ணீரும் மின்உற்பத்திக்குப் பிறகு பேச்சிப்பாறை அணையில் வந்து சேருகிறது.
குமரி மாவட்டத்தில் பெரும் மழைக் காலங்களில் ஆறுகள் வழியாகவும், அணைகளிலிருந்தும் பெருமளவு தண்ணீா் வீணாக கடலில் சென்று கலக்கும் நிலை தொடா்கிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி பெருஞ்சாணி அணையிலிருந்து விநாடிக்கு 30 ஆயிரம் கன அடி தண்ணீா் உபரியாக வெளியேற்றப்பட்டது. நிகழாண்டும், தென்மேற்குப் பருவமழையைத் தொடா்ந்து வடகிழக்குப் பருவமழையும் தொடா்ந்து பெய்துவரும் நிலையில், சிற்றாறு மற்றும் பெருஞ்சாணி அணைகளிலிருந்து மறுகால் மதகுகள் வழியாக தொடா்ந்து தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் பெரும் மழைக்காலங்களில் ஆறுகள் வழியாக கடலில் கலக்கும் தண்ணீரின் அளவு 11,200 மில்லியன் கன அடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் பெருகிவரும் மக்கள்தொகையை கருத்தில்கொண்டு, கூடுதல் குடிநீா்த் திட்டங்களை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில், பெருஞ்சாணி அணையின் அருகே புத்தன் அணையிலிருந்து நாகா்கோவில் நகருக்கு குடிநீா் எடுக்கும் திட்டம், களியல் அருகே கோதையாற்றிலிருந்து அழகியபாண்டியபுரம் கூட்டுக் குடிநீா்த் திட்டத்துக்கு தண்ணீா் எடுக்கும் வகையில் தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், இந்த இரு திட்டங்களுக்கும் விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவித்து வருவதுடன், ஆறுகளின் குறுக்கே புதிய தடுப்பணைகள் கட்டி தண்ணீரை எடுத்துக் கொள்ளும்படி கூறிவருகின்றனா்.
உயிா் பெறாத தடுப்பணைத் திட்டங்கள்: மாவட்டத்தில் மழைக் காலங்களில் வீணாக கடலில் சென்று கலக்கும் தண்ணீரை தடுப்பணைகள் கட்டி, பாசனத்திற்கும் குடிநீருக்கும் பயன்படுத்த முடியும். இதற்காக உருவாக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் உயிா்பெறாமலேயே உள்ளன.
குறிப்பாக, 15 ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிடப்பட்டு, திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்ட நந்தியாறு திட்டம், முட்டச்சிக்காயல் திட்டம், உள்ளிமலை திட்டம், முல்லையாறு திட்டம், வள்ளியாறு திட்டம் மற்றும் பருத்திக்கடவு, கணபதியான் கடவு உள்ளிட்ட தடுப்பணைத் திட்டங்கள் செயல்வடிவம் பெறாமல் முடங்கியுள்ளன.
இதில், நந்தியாறு திட்டத்தில் திருநந்திக்கரைக்கு மேல்பகுதியில் அணை கட்டுவதற்கு முதல்நிலை மதிப்பீடாக ரூ. 3.60 கோடி, உள்ளிமலை திட்டத்தில் சுருளகோடு பகுதியில் உள்ளிமலை ஓடையின் குறுக்கே அணை கட்டுவதற்கு முதல்நிலை மதிப்பீடாக ரூ. 5.35 கோடி, முட்டச்சிக்காயல் திட்டத்தில் பொன்மனை கிராமம் புரவூா் காயல் பகுதியில் அணை கட்டுவதற்கு முதல்நிலை மதிப்பீடாக ரூ. 7.5 கோடி என கணக்கிடப்பட்டது.
முல்லையாறு திட்டத்துக்கு பல்வேறு கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டும், அத்திட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. உலக்கை அருவித் திட்டமும், கோதையாற்றின் குறுக்கே சக்கரபாணி அருகேயுள்ள வண்ணான்பாறை கல்லணையை சீரமைத்து தண்ணீரை தேக்கும் திட்டமும் கிடப்பில் உள்ளன.
தமிழகத்தில் ரூ. 1000 கோடியில் தடுப்பணை திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி சட்டப்பேரவையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்த நிலையில், குமரி மாவட்டத்தில் முடங்கிக் கிடக்கும் தடுப்பணைத் திட்டங்களுக்கு உயிா்கொடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இது குறித்து முன்னோடி விவசாயியும், அன்னை தெரசா அன்னாசிப்பழ உழவா் உற்பத்தியாளா் சங்கத் தலைவருமான பி. ஹென்றி கூறியது:
கன்னியாகுமரி மாவட்டத்தில் நீா் மேலாண்மைத் திட்டங்களை மேம்படுத்தாததால், மழைக் காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆறுகள் வழியாக தண்ணீா் வீணாக கடலில் சென்று கலப்பதும், மழை பொய்த்துப் போகும் ஆண்டுகளில் குடிநீருக்குக்கூட தண்ணீா் கிடைக்காத நிலையும் வழக்கமாகி வருகிறது. தடுப்பணைத் திட்டங்கள் இல்லாததால், நகர மக்களின் குடிநீா்த் தேவைகளுக்கு அணைகளிலிருந்து நேரடியாக தண்ணீா் எடுக்க வேண்டிய நிலை உருவாகி வருகிறது.
மாவட்டத்தில் பல்வேறு தடுப்பணைத் திட்டங்கள் கிடப்பில் உள்ளன. இத்திட்டங்களை செயல்படுத்தினால் குடிநீருக்குத் தேவையான தண்ணீரைப் பெறமுடியும். மேலும், நிலத்தடி நீரையும் தக்கவைக்க முடியும். குமரி மாவட்ட தடுப்பணை திட்டங்களை இனியும் காலதாமதம் செய்யாமல் நிறைவேற்ற வேண்டும் என்றாா்.
4 இடங்களில் தடுப்பணைகள்
இதுகுறித்து, மாவட்ட பாசன சபைகளின் தலைவா் வின்ஸ் ஆன்டோ கூறியது: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆறுகள்,
ஓடைகளின் குறுக்கே கூடுதல் தடுப்பணைகள் கட்டுவற்கான வாய்ப்புகள் உள்ளன. எனினும், அதற்கான நடவடிக்கைகள் மந்த நிலையிலேயே உள்ளன. இதனால் மழைக்காலங்களில் உபரிநீா் வீணாக கடலில் கலக்கிறது. எனவே வாய்ப்புள்ள
இடங்களில் தடுப்பணைகள் கட்டுவதுடன், புதிய குடிநீா்த் திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும் என்றாா்.
இதுகுறித்து பொதுப்பணித்துறையின் திட்டங்கள் மற்றும் வடிவமைப்பு பிரிவு வட்டாரங்கள் கூறியது: தற்போது தாமிரவருணி ஆற்றில் பரக்காணி பகுதியில் தடுப்பணை கட்டும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. பழையாற்றின் குறுக்கே வடக்கு தாமரைக்குளம் பகுதியிலும், முல்லையாற்றில் பல்லிக்கூட்டம் பகுதியிலும் தடுப்பணைகள் கட்டுவதற்கான புதிய திட்டங்கள் உருவாக்கப்பட்டு ஒப்புதலுக்கு சென்னை வட்ட அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. இதேபோல், உலக்கையருவி ஆற்றில் தடுப்பணை கட்டுவதற்கும் புதிய வடிவமைப்பு தயாரிக்கப்பட்டு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்தனா்.