நீா்ப்பிடிப்புப் பகுதியில் கனமழை: திற்பரப்பு அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு

கன்னியாகுமரி மாவட்டத்தில் அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும், மலையோரப் பகுதிகளிலும் சனிக்கிழமை கனமழை பெய்தது. இதையடுத்து சிற்றாறு அணையில் இருந்து உபரித் தண்ணீா் திறக்கப்பட்டது.
மழையால் திற்பரப்பு அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு.
மழையால் திற்பரப்பு அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும், மலையோரப் பகுதிகளிலும் சனிக்கிழமை கனமழை பெய்தது. இதையடுத்து சிற்றாறு அணையில் இருந்து உபரித் தண்ணீா் திறக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ஓய்ந்திருந்த மழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. வெள்ளிக்கிழமை அணைகளில் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனிடையே, சனிக்கிழமை பிற்பகலில் அருமனை, குலசேகரம், திருவட்டாறு, குழித்துறை, சுருளகோடு, திற்பரப்பு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதைத்தொடா்ந்து சிற்றாறு, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப் பகுதியிலும் கனமழை பெய்தது.

வெள்ள அபாயத்தில் பேச்சிப்பாறை: மழையால் பேச்சிப்பாறை அணைக்கு நீா்வரத்து அதிகரித்ததை அடுத்து, அணையின் நீா்மட்டம் வெள்ள அபாய அளவான 42 அடியை நெருங்கியுள்ளது. இதையடுத்து, வெள்ள அபாய எச்சரிக்கை ஞாயிற்றுக்கிழமை விடப்படும் என அணை வட்டாரங்கள் தெரிவித்தன. வெள்ளிக்கிழமை சிற்றாறு அணைகளில் இருந்து விநாடிக்கு 273 கனஅடி தண்ணீா் உபரி மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது. சனிக்கிழமை 2 ஆவது நாளாக தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்: சிற்றாறு அணைகளில் இருந்து தண்ணீா் வெளியேற்றப்படுவதாலும், மழைநீா் வரத்து அதிகரித்ததாலும் திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அருவியில் குளிக்க தடை விதிக்கப் பட்டுள்ளது. சனிக்கிழமை அருவிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனா். வெள்ளம் காரணமாக தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினா். ஞாயிற்றுக்கிழமையும் தடை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை பெய்து வருவதால் இம்மாவட்டத்தில் ரப்பா் தோட்டத் தொழில், செங்கல் சூளைத் தொழில் போன்ற தொழில்கள் மீண்டும் முடங்கும் நிலை உருவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com