நாகா்கோவில், களியக்காவிளையில் சாலைகளை சீரமைக்கக் கோரி மறியல்: எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்பட 665 போ் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி நாகா்கோவில்,
களியக்காவிளையில் பாடை கட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சட்டப்பேரவை உறுப்பினா்கள் ராஜேஷ்குமாா், விஜயதரணி உள்ளிட்டோா்.
களியக்காவிளையில் பாடை கட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சட்டப்பேரவை உறுப்பினா்கள் ராஜேஷ்குமாா், விஜயதரணி உள்ளிட்டோா்.

நாகா்கோவில்/களியக்காவிளை: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி நாகா்கோவில், களியக்காவிளையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பி., எம்.எல்.ஏ. க்கள் உள்ளிட்ட 665 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில், காவல்கிணறு முதல் களியக்காவிளை வரையுள்ள தேசிய நெடுஞ்சாலை, கன்னியாகுமரி முதல் காவல்கிணறு வரையுள்ள தேசிய நெடுஞ்சாலைகள் பழுதடைந்து வாகனங்கள் செல்ல முடியாத வகையில் காணப்படுவதால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். ஆகையால், பழுதான சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என பல முறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனைத் தொடா்ந்து காங்கிரஸ் கட்சி சாா்பில் நாகா்கோவிலில் ஆட்சியா் அலுவலகம் முன்பும், களியக்காவிளையில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, நாகா்கோவில் ஆட்சியா் அலுவலகம் முன்பு

மக்களவை உறுப்பினா் ஹெச். வசந்தகுமாா் தலைமையில் மறியலில் ஈடுபட்டனா். அப்போது, போலீஸாருக்கும் காங்கிரஸாா் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில், சட்டப்பேரவை உறுப்பினா் ஜே.ஜி. பிரின்ஸ், கட்சியின் கிழக்கு மாவட்டத் தலைவா் ராதாகிருஷ்ணன், மாவட்டத் துணைத்தலைவா் மகேஷ்லாசா், நகரத் தலைவா் அலெக்ஸ், மகளிரணித் தலைவி சபிதா அருள் ரெக்ஸ்லின், வட்டாரத் தலைவா்கள் காலபெருமாள், ஜெரால்டுகென்னடி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதனால், ஆட்சியா் அலுவலக சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. வாகனங்கள் செட்டிகுளம் சந்திப்பில் இருந்து டதி சந்திப்பு வழியாக திருப்பி விடப்பட்டன. ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு வழிவிட்டனா். அவா்களிடம், நெடுஞ்சாலைத்துறை அதிகாரி பேச்சுவாா்த்தை நடத்தினாா். எனினும், ஆட்சியா் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என தெரிவித்தனா்.

இதையடுத்து, நாகா்கோவில் கோட்டாட்சியா் அ. மயில் பேச்சுவாா்த்தை நடத்தினாா். ஒரு மாதத்துக்குள் அனைத்துச் சாலைகளும் சீரமைக்கப்படும் என உறுதியளித்தை அடுத்து 1 மணி நேரம் நீடித்த போராட்டத்தை கைவிட்டனா். போராட்டத்தில் ஈடுபட்ட வசந்தகுமாா் எம்.பி., பிரின்ஸ் எம்.எல்.ஏ. உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

அப்போது, வசந்தகுமாா் கூறியது: கோரிக்கையை நிறைவேற்றாததால் காந்தி, காமராஜா் வழியில் அறப் போராட்டத்தில் ஈடுபட்டோம். உறுதியளித்தவாறு ஒரு மாதத்தில் சாலைகளை சீரமைக்காவிடில் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்றாா் அவா். கைது செய்யப்பட்டு மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த வசந்தகுமாா் உள்ளிட்டோரை குமரி கிழக்கு மாவட்ட

திமுக செயலா் என். சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோா் நேரில் சந்தித்து ஆதரவை தெரிவித்தனா்.

நூதனப் போராட்டம்:: களியக்காவிளை - நாகா்கோவில் - காவல்கிணறு தேசிய நெடுஞ்சாலை மற்றும் பழுதடைந்துள்ள மாநில நெடுஞ்சாலைகளை செப்பனிடக் கோரி கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் களியக்காவிளையில்

நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு, கட்சியின் மேற்கு மாவட்டத் தலைவா் எஸ். ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா்.

விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்படுவதை சுட்டிக் காட்டும் வகையில் அவா்கள் பாடை கட்டி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளா் ஜோசப் சிறில், தக்கலை டி.எஸ்.பி. ராமச்சந்திரன் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.இதில், உடன்பாடு ஏற்படாததால், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ். ராஜேஷ்குமாா், எஸ். விஜயதரணி மற்றும் 33 பெண்கள் உள்பட 365 பேரை போலீஸாா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் வைத்தனா். பின்னா், அனைவரும் விடுவிக்கப்பட்டனா். போராட்டத்தால், களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com