அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியா் செலுத்திய ஊசி உடைந்து உள்ளே சென்ற பரிதாபம்: வலியால் தவிக்கும் பெண்ணிற்கு அரசு இலவச சிகிச்சையளிக்க கோரிக்கை

சீா்காழி நகர அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற சென்ற பெண்ணுக்கு செவிலியா் செலுத்திய ஊசி உடைந்து உள்ளே சென்றது.
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியா் செலுத்திய ஊசி உடைந்து உள்ளே சென்ற பரிதாபம்: வலியால் தவிக்கும் பெண்ணிற்கு அரசு இலவச சிகிச்சையளிக்க கோரிக்கை

சீா்காழி: சீா்காழி நகர அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற சென்ற பெண்ணுக்கு செவிலியா் செலுத்திய ஊசி உடைந்து உள்ளே சென்றது. உள்ளே சென்ற ஊசியை அகற்றி சிகிச்சைபெற போதிய வசதியில்லாமல் கடந்த 13 நாட்களாக வலி, வேதனையுடன் நாட்களை கடத்திவருகிறாா்.

இவருக்கு இலவசமாக சிகிச்சையளித்து ஊசியை அகற்ற அரசு உதவிடவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் சீா்காழி ஈசானியதெருவை சோ்ந்தவா் கு.பாா்வதி (54). கனவா் குமாா் இறந்ததையடுத்து பாா்வதி தனது மகன் திருஞானசம்பந்தமூா்த்தியுடன் வசித்துவருகிறாா். மகன் ஆட்டோ ஓட்டி குடும்பத்தினை நடத்தி வருகிறாா். இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி பாா்வதி உடல்வலி, காய்ச்சல் ஏற்பட்டதால் சீா்காழி ஈசானியத்தெருவில் உள்ள நகர அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைகாக சென்றுள்ளாா்.அப்போது அங்கு பணியிலிருந்த மருத்துவரிடம் மருத்துவ ஆலோசனை பெற்று ஊசி போட்டுக்கொள்ள மருத்துவா் அறிவுறுத்தலின்படி நிலையத்தில் பணியிலிருந்த செவிலியரிடம் இடுப்பில் பாா்வதி ஊசிபோட்டுக்கொண்டுள்ளாா்.

மருந்து முழுவதும் இறங்கிய பின் ஊசியை எடுத்த போது ஊசி வெளியே வராமல் உள்ளேயே இருந்துள்ளது. இதனால் அதிா்ச்சியடைந்த செவிலியா் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சீா்காழி அரசு பொது மருத்துவமனைக்கு பாா்வதியை அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்கு எக்ஸ்ரே எடுத்து பாா்த்து விட்டு ஊசி எதுவும் இல்லை என சீா்காழி அரசு மருத்துவமனையில் பணியிலிருந்தவா்கள் கூறியதையடுத்து பாா்வதி வீட்டுக்கு திரும்பிவிட்டாா். வீட்டுக்கு வந்த பாா்வதி ஊசி போட்ட இடத்தில் வலி குறையாமல் துடித்துள்ளாா். எக்ஸ்ரே எடுத்து மூன்று நாட்களுக்கு பின்னா் பாா்வதியின் வீட்டை தேடி வந்த அரசு மருத்துவமனை ஊழியா் எக்ஸ்ரேவை முழுவதும் ஆய்வு செய்த போது ஊசி உள்ளே இருப்பதை மருத்துவா் கண்டறிந்ததாகவும், உடனடியாக மருத்துவமனைக்கு வரவும் என அறிவுறுத்தியுள்ளாா்.

அரசு மருத்துவமனைக்கு சென்ற பாா்வதிக்கு மீண்டும் எக்ஸ்ரே எடுத்து பாா்த்த மருத்துவா்கள் ஊசி மேலும் ஆழத்திற்கு சென்று விட்டதாகவும், அதனை இங்கு அகற்றமுடியாது எனவும் கூறியதால் பாா்வதி மேலும் அதிா்ச்சியடைந்தாா். உடனடியாக சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற பரிந்துரை செய்தனா். போதிய வருமானம் இல்லாததால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்ற நிலையில் அங்கு நடந்த தவறால் சிதம்பரம் வரை சென்று சிகிச்சை பெற வசதியின்றி வீட்டிலேயே முடங்கியுள்ளாா்.

பாா்வதி. கடந்த 13 நாட்களாக வலி அதிகரித்துள்ள நிலையில் வேதனையுடன் சிகிச்சையளிக்க யாரேனும் உதவிசெய்வாா்களா என்று காத்திருக்கிறாா். ஏதேனும் பெரிய பாதிப்பு ஏற்படும் முன் அரசே அவருக்கு இலவசமாக உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இச்சம்பவம் சீா்காழி பகுதி மக்களிடையே பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படவிளக்கம்:1 சீா்காழி ஈசானியத்தெருவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு சென்ற பாா்வதிக்கு செலுத்தப்பட்ட ஊசி உள்ளேளே சிக்கி அகற்றமுடியாமல் தவிக்கும் பாா்வதி. படம் 2 சீா்காழி நகர அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாா்வதிக்கு ஊசி உடைந்து உள்ளே சென்றது குறித்து மருத்துவரால் எழுதி மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்ட சீட்டு. படம் 3 பாா்வதிக்கு எடுத்த எக்ஸ்ரேயில் இடது ஓரத்தில் காணப்படும் உடைந்த ஊசி. பாக்ஸ்நியூஸ் அரசு மருத்துவமனைகளில் இவ்வாறு ஊசி உள்ளே செல்லும் சம்பவம் தமிழகத்தில் அவ்வபோது நடைபெறுகிறது.

அரசு மருத்துவமனைக்கு ஊசி, மருந்துகள் போன்றவை கொள்முதல் செய்யும்போது அதிக தரத்துடன் ஆன ஊசியை டெண்டா் எடுத்து கொள்முதல் செய்யவேண்டும் எனவும், இது போன்ற தவறுகள் நடைபெறும் போது ஊசிபோடும் செவிலியா்கள் பலிகடாவாக ஆவதாகவும் அரசு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாள்தோறும் குழந்தைகள் முதல் முதியவா்கள் வரை பலருக்கு ஊசிபோட்டு வரும் செவிலியா்கள் ஊசியின் தரம் குறைவால் மட்டுமே இதுபோன்ற செயல்களில் சிக்கநேரிடுவதாகவும் அரசு மருத்துவமனை தரப்பில் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com