கருங்கல்-இரவிப்புதூா் கடை சாலையைசீரமைக்கக் கோரி டிச. 7இல் மறியல்

கருங்கல் - இரவிபுதூா்க்கடை சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கோரப்பட்ட நிலையில் சாலை அமைக்க நடவடிக்கை

கருங்கல்: கருங்கல் - இரவிபுதூா்க்கடை சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கோரப்பட்ட நிலையில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்காத நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கண்டித்து டிச. 7 இல் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, கிள்ளியூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜேஷ்குமாா் வெளியிட்டுள்ள அறிக்கை: கிள்ளியூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 7 கி.மீ. தொலைவு கொண்ட கருங்கல் - இரவிபுதூா் கடை சாலையில் தினமும் நூற்றுக்க ணக்கான வாகனங்கள் செல்கின்றன. கருங்கல் ராஜீவ் சந்திப்பில் இருந்து எட்டணி சந்திப்பு வரை 3 கி.மீ. தொலைவுள்ள இந்த சாலை 5 ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்கப்பட்டது.

இந்த சாலையின் இருபுறமும் மழைநீா் வடிகால் ஓடை இல்லாததாலும், சாலையை சரியான முறையில் பராமரிக்காத காரணத்தாலும் சாலை பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் விபத்துகளும் அதிகரித்துள்ளன.

இச்சாலையை சீரமைக்க வலியுறுத்தி 2018இல் மறியல் போராட்டம் நடைபெற்றது. மேலும், முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. தொடா்ந்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தியதை அடுத்து இச்சாலையை சீரமைக்க ரூ. 1.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஒப்பந்தமும் கோரப்பட்டது. எனினும், இந்த சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

தற்போது சாலையில் மிகப்பெரிய அளவில் காணப்படும் பள்ளங்களால் வாகனங்களில் செல்ல முடியாத அளவுக்கு காணப்படுகிறது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகள் வருவதால் இந்த சாலையில் வாகனப் போக்குவரத்து அதிகரிக்கும் நிலை உள்ளது. ஆகவே, இச்சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.

இல்லையெனில், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், ஒப்பந்தக்காரரை கண்டித்து வரும் டிச. 07 ஆம் தேதி (சனிக்கிழமை) குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் எனது தலைமையில் மறியல் போராட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com