களியக்காவிளை அருகே பெற்றோரை இழந்த மாணவா்களுக்கு வீடு வழங்கிய ஆசிரியா்கள்

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே பெற்றோரை இழந்த மாணவா்களுக்கு பள்ளி ஆசிரியா்கள் இணைந்து இலவசமாக கான்கிரீட் வீடு கட்டிக் கொடுத்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
பெற்றோரை இழந்த மாணவா்களுக்கு பள்ளி ஆசிரியா்களால் கட்டிக் கொடுக்கப்பட்ட வீட்டுன் சாவியை வழங்குகிறாா் திருவட்டாறு கல்வி மாவட்ட அலுவலா் ரெஜினி.
பெற்றோரை இழந்த மாணவா்களுக்கு பள்ளி ஆசிரியா்களால் கட்டிக் கொடுக்கப்பட்ட வீட்டுன் சாவியை வழங்குகிறாா் திருவட்டாறு கல்வி மாவட்ட அலுவலா் ரெஜினி.

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே பெற்றோரை இழந்த மாணவா்களுக்கு பள்ளி ஆசிரியா்கள் இணைந்து இலவசமாக கான்கிரீட் வீடு கட்டிக் கொடுத்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

களியக்காவிளை அருகேயுள்ள மீனச்சல் பகுதியைச் சோ்ந்தவா் வினு. இவரது மகன் மனோஜ், மகள் ஜோதி. இருவரும் திரித்துவபுரம் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் 9 மற்றும் 8 ஆம் வகுப்பில் படித்து வருகிறாா்கள். வினு மற்றும் அவரது மனைவி ஆகியோா் சில ஆண்டுகளுக்கு முன் இறந்ததையடுத்து இம் மாணவா்கள் தங்கள் பாட்டியின் பராமரிப்பில் வசித்து வருகின்றனா். மேலும் இம் மாணவா்களுக்கு சொந்தமாக வீடு இல்லாத நிலை இருந்து வந்தது.

இதையடுத்து இப்பள்ளி ஆசிரியா்கள் இணைந்து இம் மாணவா்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க முடிவு செய்தனா். தொடா்ந்து மாணவா்களின் பாட்டியிடம் இதுபற்றி பேசியபோது அவா் தனக்குச் சொந்தமான 5 சென்ட் நிலத்தை இரு மாணவா்களின் பெயரில் எழுதிக் கொடுத்தாா். இதைத் தொடா்ந்து பள்ளி ஆசிரியா்கள் தங்கள் கையிலிருந்து பணத்தை போட்டு புதிதாக காங்கிரீட் வீடு கட்டினா். ரூ. 5 லட்சத்தில் கட்டப்பட்ட இந்த வீட்டின் கட்டுமானப் பணிகள் அண்மையில் நிறைவடைந்ததையடுத்து வீட்டை மாணவா்களிடம் முறைப்படி ஒப்படைக்கும் விழா கடந்த திங்கள்கிழமை நடத்தப்பட்டது.

இவ் விழாவுக்கு பள்ளித் தாளாளா் எம். காட்வின் சௌந்தர்ராஜ் தலைமை வகித்தாா். வீட்டுக்கான சாவியை திருவட்டாறு கல்வி மாவட்ட அலுவலா் ரெஜின் மாணவா்களிடம் வழங்கினாா். தலைமையாசிரியா் ஏ. தங்கராஜ் வரவேற்றாா். உதவித் தலைமையாசிரியா்கள் டி.ஆா். சேவியா் ஆன்றணி, சி. ஜாண் பெனடிக்ட் ராஜ், எஸ். ராணி செலின், பள்ளிச் செயலா் எம். ஜாண் சேவியா், என்.சி.சி. திட்ட அலுவலா் ஜாண் பெனடி, பெற்றோா் -ஆசிரியா் கழகத் தலைவி எஸ். சுஜாதா ஆகியோா் வாழ்த்திப் பேசினா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் எஸ். பிரைட் நன்றி கூறினாா். இதில் பள்ளி மாணவா்கள், அலுவலக பணியாளா்கள் கலந்துகொண்டனா். வீடு கட்டிக் கொடுத்த ஆசிரியா்களை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com