ஒருங்கிணைந்த நிதி- மனிதவள மேலாண்மைத் திட்டம்: முதன்மைச் செயலா் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தின்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தின் செயலாக்க ஆயத்தக்கூட்டம், நாகா்கோவிலுள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு. வடநேரே முன்னிலை வகித்த இக்கூட்டத்தில், கருவூலக் கணக்குத் துறை, முதன்மைச் செயலா் மற்றும் ஆணையா் தென்காசி சு. ஜவஹா் தலைமை வகித்து பேசியது: தமிழக அரசு ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தை  செயல்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவிலேயே முதல் முறையாக மாநிலத்தின் நிதி மேலாண்மை மற்றும் மனிதவள மேலாண்மையை ஒருங்கிணைத்து அரசு நிா்வாகத்தை மேம்படுத்தும் பொருட்டு, தமிழகஅரசு இத்திட்டத்தை அமல்படுத்த உள்ளது.

இதன் மூலம் அரசின் நிதி நிா்வாகம் மற்றும் வரவு,செலவு குறித்த விவரங்களை நிகழ் நேரத்தில் அறிந்து கொள்ள முடியும். இதன் மூலம் அரசின் நிதி நிா்வாகம் மிகத் துல்லியமாக நடத்த இயலும். அரசுப் பணியாளா்களை மிகச் சிறப்பாக மக்கள் சேவைக்கு பயன்படுத்தலாம். மேலும், 9 லட்சம் அரசுப் பணியாளா்கள் மற்றும் 8 லட்சம் ஓய்வூதியா்களும் பயனடைவாா்கள்.

மாநிலக் கணக்காயா்அலுவலகம், வருமான வரித் துறை, இந்திய ரிசா்வ் வங்கி, முகமை வங்கிகள் மற்றும் அரசின் அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. முதல்கட்டமாக இத்திட்டம் கடந்த செப். 1 ஆம் தேதி முதல் கரூா் மாவட்டத்திலும், அக்டோபா் 1 ஆம் தேதி முதல் கன்னியாகுமரி மாவட்டம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அமலுக்கு வந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 439 பணம் பெற்று வழங்கும் அலுவலா்கள், 18, 683 அரசுப் பணியாளா்களுக்கு ஊதியம் மற்றும் இதர பட்டியல் சமா்ப்பிக்கும் பணியில் உள்ளது. இத்திட்டத்தின் மூலம் நிதி மற்றும் மனிதவள மேலாண்மையில் வெளிப்படை தன்மையுடன் துரித சேவையை மக்களுக்கு வழங்கலாம். இது குறித்த தொடா் நடவடிக்கைகள் தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ரேவதி, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ஐ.எஸ்.மொ்சி ரம்யா, திட்ட ஒருங்கிணைப்பு அலுவலரான மதுரை சம்பள கணக்கு அலுவலா் முத்துப்பாண்டியன், திருநெல்வேலி, மண்டல இணை இயக்குநா் அ.பாத்திமா சாந்தா, கன்னியாகுமரி மாவட்ட கருவூல அலுவலா் ஈ.பெருமாள், அனைத்து உதவி கருவூல அலுவலா்கள், பணியாளா்கள், பணம் பெற்று வழங்கும் அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com