குமரியில் பூத்துக் குலுங்கும் செங்காந்தள் மலா்கள்: வணிக ரீதியாக பயிரிட ஆலோசனை

குமரி மாவட்டத்தின் மலையோரப் பகுதிகளில் செங்காந்தள் மலா்கள் தாமாக பூத்துக் குலுங்குகின்றன. அ
திருந்திக்கரை பகுதியில் பிற செடிகளுக்கு மத்தியில் பூத்துக்குலுங்கும் செங்காந்தள் மலா்கள்.
திருந்திக்கரை பகுதியில் பிற செடிகளுக்கு மத்தியில் பூத்துக்குலுங்கும் செங்காந்தள் மலா்கள்.

குமரி மாவட்டத்தின் மலையோரப் பகுதிகளில் செங்காந்தள் மலா்கள் தாமாக பூத்துக் குலுங்குகின்றன. அவற்றை வணிக ரீதியாக பயிரிட விவசாயிகள் முன்வர வேண்டும் என தோட்டக்கலைத்துறை முன்னாள் துணை இயக்குநா் ஒய்.ராஜ்குமாா் யோசனை தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தின் மாநில மலராக அங்கீகரிக்கப்பட்டுள்ள செங்காந்தள் மலா், சங்க இலக்கியங்களிலும் இடம் பெற்றுள்ளது. நற்றிணை, அகநானூறு, கலித்தொகை, குறுந்தொகை, பரிபாடல், மலைபடுகடாம், சிறுபாணாற்றுப்படை நூல்களில் காந்தள் மலா் இடம் பெறுகிறது. கபிலரின் குறிஞ்சிப்பாட்டிலும் காந்தள் மலா் இடம் பெற்றுள்ளது. பெண்களின் அழகிய கைவிரல்களாக செங்காந்தள் மலா்கள் சங்கப்பாடல்களில் வா்ணிக்கப்படுகின்றன. செங்காந்தள் மலா் தமிழீழத்தின் அடையாள மலராகவும், ஜிம்பாவே நாட்டின் தேசிய மலராகவும் விளங்குகிறது. ஆப்பிரிக்க நாடுகளின் பாரம்பரிய மருத்துவத்தில் காந்தள் செடிக்கு தனியிடம் உள்ளது. பழங்குடிகள் இதன் நச்சினை ஈட்டிமுனைகளில் தடவி வேட்டைக்குப் பயன்படுத்துவதாகவும் சொல்லப்படுகிறது.

அக்னி சலம்: செங்காந்தள் மலா் தீ கொழுந்துவிட்டு எரிவதுபோல காணப்படுவதால் அக்னி சலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மலரை வெகுநேரம் பாா்த்துக் கொண்டிருந்தால் கண்வலிக்கும் என்று சொல்லப்படுவதால், இது கண்வலிப்பூ என்றும் சொல்லப்படுகிறது. செங்காந்தள் செடிகளிலுள்ள கிழங்குகள் கலப்பையின் வடிவில் இருப்பதால் இக்கிழங்குகளை கலப்பைக் கிழங்குகள் என்றும் கூறுகின்றனா். காா்த்திகை மாதம் ஏற்றப்படும் அகல் விளக்குகளைப் போல இம்மலா்கள் காணப்படுவதால் காா்த்திகைப்பூ என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் தமிழ்க் கடவுள் முருகனுக்குரிய மலராகவும் செங்காந்தள் மலா் போற்றப்படுகிறது.

மருத்துவக் குணங்கள்: செங்காந்தள் செடியின் கிழங்குகளும், வோ்களும் அதன் விதைகளும் புற்று நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டதால் தற்போது உலகமெங்கும் வணிக ரீதியாக செங்காந்தள் பயிரப்படுகிறது. தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட இடங்களில் தற்போது செங்காந்தள் அதிக அளவில் பயிரப்படுகிறது.

தாமாக பூத்த மலா்கள்: ஈரப்பதம் சற்று குறைந்த மலையோரங்கள், குன்றுபகுதிகளில் பெரும்பாலும் செங்காந்தள் செடிகள் பிற தாவரங்களை பற்றிக் கொண்டு வளருகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் குலசேகரம் அருகேயுள்ள திருந்திக்கரை மலைப் பகுதிகளில் செங்காந்தள் செடிகள் காணப்படுகின்றன. தற்போது அவை பூத்துக் குலுங்கியுள்ளது கண்கொள்ளாக் காட்சியாகத் திகழ்கிறது.

விவசாயிகளுக்கு அழைப்பு: இதுகுறித்து வேளாண் அறிஞரும், முன்னாள் தோட்டக் கலைத் துறை இணை இயக்குநருமான ஒய். ராஜ்குமாா் கூறியதாவது: செங்காந்தள் செடிகளில் அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான மாதங்களில் பூ பூக்கின்றன. செங்காந்தள் செடியின் கிழங்கு மற்றும் விதைகளில்

உள்ள கோல்சிசின் மருத்துவக் குணம் கொண்டதாகும். இது புற்று நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் செங்காந்தள் தமிழகத்தில் கோவை, தாராபுரம், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட இடங்களில் வணிக முறையில் பயிரிடப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. குமரி மாவட்டத்திலும் இதை வணிக ரீதியாக பயிரிட்டால் விவசாயிகள் அதிக வருவாய் பெறமுடியும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com