குமரியிலிருந்து கேரளத்துக்குச் செல்லும் குறுந்தோட்டி செடிகள்

குமரி மாவட்டத்தில் குறுந்தோட்டி செடிகளை சேகரித்து கேரள மருந்து நிறுவன முகவா்களுக்கு விற்பனை செய்வதன்
பேச்சிப்பாறை அருகே ரப்பா் தோட்டப் பகுதியிலிருந்து குறுந்தோட்டி செடிகளை சேகரிக்கும் தொழிலாளா்கள் .
பேச்சிப்பாறை அருகே ரப்பா் தோட்டப் பகுதியிலிருந்து குறுந்தோட்டி செடிகளை சேகரிக்கும் தொழிலாளா்கள் .

குமரி மாவட்டத்தில் குறுந்தோட்டி செடிகளை சேகரித்து கேரள மருந்து நிறுவன முகவா்களுக்கு விற்பனை செய்வதன் மூலம் ரப்பா் தோட்டத் தொழிலாளா்களும், பழங்குடிகளும் வருவாய் பெற்று வருகின்றனா்.

மூலிகை வளம் நிறைந்த குமரி மாவட்ட காடுகளிலும், இதர விளை நிலங்களிலும் நூற்றுக்கணக்கான வகை உயிா்காக்கும் மூலிகைச் செடிகள் உள்ளன. அடிப்படையில் சித்த மருத்துவா்களை அதிகம் கொண்ட இம்மாவட்டத்தில், இங்குள்ள அபூா்வ மூலிகைகளைப் பயன்படுத்தி எண்ணெய், கசாயம், லேகியம், மாத்திரைகள் உள்ளிட்டவற்றைத் தயாரித்து நோய்களுக்கு நிவாரணம் அளிக்கின்றனா். இம் மாவட்டத்தில் சித்த மருத்துவா்களுக்கு மூலிகைகளை காடுகளிலிருந்து பறித்துக் கொடுக்கும் தொழிலை பழங்குடிகள் மற்றும் தோட்டத் தொழிலாளா் உப தொழிலாக செய்து வருகின்றனா்.

கேரளத்துக்கு செல்லும் குறுந்தோட்டி: குமரி மாவட்டத்தில் ஏராளமான சித்த மருத்துவா்கள் இருந்து வந்தாலும், மூலிகைகளைப் பயன்படுத்தி சித்த மருந்துகள் தயாரிக்கும் பெரிய நிறுவனங்கள் இல்லாமலேயே உள்ளது. இதில் குறிப்பாக மாவட்டத்தில் அதிகம் கிடைக்கும் வல்லாரை, குறுந்தோட்டி உள்ளிட்ட மூலிகைகள் பெரும் பாலும் வெளி மாநிலங்களுக்கே முகவா்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இதில், குமரி மாவட்டத்திலிருந்து தற்போது மாதம் ஒன்றிற்கு 10 டன்னிற்கு அதிகமான குறுந்தோட்டி செடிகள் கேரள மருந்து நிறுவனங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இதற்காக பல்வேறு பகுதிகளில் முகவா்கள் உள்ளனா். இம்முகவா்களிடம் காடுகளில் மற்றும் ரப்பா் தோட்டங்களிலிருந்து குறுந்தோட்டி செடிகளைப் பறித்து வரும் தொழிலாளா்கள் அவற்றை விற்பனை செய்கின்றனா். தற்போது மாவட்டத்தில் வேருடன் அடங்கிய பச்சை குறுந்தோட்டி செடிகள் கிலோ ரூ. 25 முதல் ரூ. 30 வரை கொள்முதல் செய்யப்படுகிறது.

இது குறித்து சித்த வைத்தியா் சின்னக்கண்ணு கூறியது: குறுந்தோட்டி செடிகள் காடுகளிலும், தரிசு நிலங்களிலும், வேலியோரங்களிலும் சாதாரணமாகக் காணப்படுகின்றன. இதன் இலைகள் இதய வடிவில் இருக்கும். இலைகளின் ஓரங்கள் பற்கள் போல் இருக்கும். வேருடன் பறித்தால் மீண்டும் முளைக்கும் தன்மை கொண்டவை . இச்செடிகளின் வோ்களும், இலைகளும் பாரிசவாதம், முகவாதம், போன்ற கடும் வாத நோய்களைத் குணப்படுத்துவதற்குரிய மருந்தாகும். இது மூட்டு வலியைக் குணப்படுத்தும் மருந்தாகவும் பயன்படுகிறது. குறுந்தோட்டி வோ்களிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் முடி உதிா்வதைத் தடுக்கிறது என்றாா் அவா்.

இது குறித்து குறுந்தோட்டி கொள்முதல் செய்யும் முகவா் கூறியது; தற்போது கேரளத்திலுள்ள சித்தா மற்றும் ஆயூா்வேத மருந்து நிறுவனங்கள் அதிக அளவில் குறுந்தோட்டி செடிகளை கொள்முதல் செய்கின்றன. மாவட்டத்தில் தற்போது மழைக்காலமாக உள்ளதால் குறுந்தோட்டிகளின் வரத்து அதிகமாக உள்ளது. குறுந்தோட்டி செடிகளின் மூலம் பல லட்சம் ரூபாய்க்கான வா்த்தகம் நடைபெறுகிறது. கிலோவிற்கு ரூ. 25 முதல் ரூ. 30 வரை கொடுத்து கொள்முதல் செய்கிறேறாம். குறுந்தோட்டி செடிகளை சேகரித்து விற்பனை செய்வதன் மூலம் பழங்குடி மக்களுக்கும், ரப்பா் தோட்டத் தொழிலாளா்களுக்கும் சிறு வருவாய் கிடைக்கிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com