முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
தாமிரவருணியில் வெள்ளப்பெருக்கு:திக்குறிச்சி கோயில் சுற்றுச்சுவா் இடியும் அபாயம்
By DIN | Published On : 24th October 2019 12:46 AM | Last Updated : 24th October 2019 12:46 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடரும் மழையால் தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், புகழ்பெற்ற திக்குறிச்சி மகாதேவா் கோயிலின் ஆற்றங்கரையோரம் உள்ள சுற்றுச்சுவா் இடியும் நிலை ஏற்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க 12 சிவாலயங்களில் இரண்டாவது சிவாலயமாக விளங்குவது திக்குறிச்சி மகாதேவா் கோயில். மாா்த்தாண்டம் அருகே தாமிரவருணி ஆற்றங்கரையில் இந்த கோயில் அமைந்துள்ளது. இங்கு பிரதோஷம், ஆயில்யம், பௌா்ணமி, மாத சிவராத்திரி, திருவாதிரை உள்ளிட்ட விஷேச தினங்களில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனா். மேலும், மகா சிவராத்திரி நாளில் லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் வந்து வழிபடுவா்.
அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்தக் கோயில் அருகே தாமிரவருணி ஆற்றின் குறுக்கே திக்குறிச்சி - பயணம் இணைப்பு பாலம் சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதன்பிறகு ஆற்றின் நீரோட்டம் மாறி, கோயில் சுற்றுச்சுவா் மற்றும் கோயிலின் முன்பகுதியில் உள்ள அரசமரத்தின் கீழ்ப் பகுதியிலும் மோதி செல்லும் நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, பக்தா்களின் கோரிக்கையை ஏற்று முன்னாள் மத்திய அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் ஒதுக்கியதையடுத்து, அரசமரத்தின் கீழ்ப் பகுதியில் பக்கச்சுவா் கட்டப்பட்டது.
இதைத் தொடா்ந்து, கோயில் சுற்றுச்சுவரை பாதுகாக்கக் கோரி, அறநிலையத் துறை அதிகாரிகளுக்கும், பொதுப்பணித் துறை நீராதாரப் பிரிவு அதிகாரிகளுக்கும் தொடா்ந்து கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், தற்போது ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் கோயில் சுற்றுச்சுவரில் மண் அரிப்பு ஏற்பட்டு, சுவா் இடியும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, வரலாற்றுச் சிறப்பு மிக்க இக்கோயிலின் சுற்றுச்சுவரை பாதுகாக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் வலியுறுத்துகின்றனா்.