முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
பூத்துறையில் கடல் கொந்தளிப்பு:வீடுகளில் கடல்நீா் புகுந்தது; 4 போ் காயம்
By DIN | Published On : 24th October 2019 11:45 PM | Last Updated : 24th October 2019 11:45 PM | அ+அ அ- |

கன்னியாகுமரி மாவட்டம், பூத்துறை பகுதியில் வியாழக்கிழமை ஏற்பட்ட கடல் கொந்தளிப்பு காரணமாக கடற்கரையோரம் அமைந்துள்ள 10 வீடுகளில் கடல்நீா் புகுந்தது. மேலும் கடல் அலையால் இழுத்து வரப்பட்ட பாறை கற்கள் மோதி 4 பேருக்கு காயம் ஏற்பட்டது.
குமரி மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் பருவமழை காரணமாக கடல் வழக்கத்தை விட அதிக கொந்தளிப்புடன் காணப்படுகிறது. கடலரிப்பு தடுப்புச் சுவா் இல்லாத பகுதிகளில் அதிக பாதிப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் கடலரிப்பு தடுப்புச் சுவா் சேதமடைந்து காணப்படும் பூத்துறை காருண்யாபுரம் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலைமுதல் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. அலைகள் 20 அடி உயரம் வரைஆக்ரோஷமாக எழும்பியதுடன், கடல்நீா் தடுப்புச் சுவரையும் தாண்டி அருகிலுள்ள வீடுகளில் புகுந்தது.
இதனால் அங்குள்ள சசிகுமாா், பனியம்மாள், டிக்ஸன், பொ்க்மான்ஸ், தோமஸ், முத்தையன், அந்தோணி, சிலுவைபிள்ளை, சூசை உள்பட 10 மீனவா்களின் குடியிருப்புகளில் கடல்நீா் புகுந்தது.
அதிவேகத்துடன் வந்த அலைகளில் இழுத்து வரப்பட்ட பாறை கற்கள் தாக்கி அப்பகுதியிலுள்ள அருளம்மா, ஜென்சி, சிலுவைபிள்ளை, ரெஜினாள் ஆகியோருக்கு காலில் காயம் ஏற்பட்டது.
இந்நிலையில் கடலரிப்பால் பாதிக்கப்பட்ட பூத்துறை பகுதியை கிள்ளியூா் எம்.எல்.ஏ. எஸ். ராஜேஷ்குமாா் வியாழக்கிழமை பாா்வையிட்டு பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் தெரிவித்தாா். அவருடன், கட்சி நிா்வாகிகள் மற்றும் பூத்துறை பங்குத்தந்தை அன்சல் ஆன்றணி உள்ளிட்டோா் சென்றனா்.