நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பை அகற்றும் அதிகாரிகளை தடுத்தால் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் அதிகாரிகளை தடுப்போர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் அதிகாரிகளை தடுப்போர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே.
இது குறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளம், கால்வாய், ஆறு மற்றும் ஓடைகள் போன்ற நீர் நிலை புறம்போக்குகளில் காணப்படும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் வகையில் அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகள் குறியீடு செய்யப்பட்டு, அகற்றுவதற்கு தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு அகற்றுதல் சட்டம் மற்றும் தமிழ்நாடு ஏரிகள் குளங்கள் பாதுகாத்தல், ஆக்கிரமிப்பு அகற்றுதல் சட்டத்தை பின்பற்றி ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. தமிழக அரசு நீர்நிலைகளை பாதுகாக்க வழங்கிய அறிவுரையின்படி, நீதிமன்றங்களின் வழிகாட்டுதல் தீர்ப்பின் அடிப்படையில் நிபந்தனைகளு க்கு உள்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. 
இப்பணியில் ஈடுபடும் அரசுப் பணியாளர்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும், அரசின் உத்தரவு வரம்பிற்குள்பட்டு
ஈடுபட்டுள்ளனர். இதனை, பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியினை மேற்கொள்ளும் அரசு அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வண்ணம் தனிப்பட்ட நபர்களோ, ஆக்கிரமிப்பு செய்தவர் களோ செயல்படக் கூடாது.
இப்பணியினை மேற்கொள்ளும்போது அரசு அதிகாரிகளை தனிப்பட்டமுறையில் கொச்சைப்படுத்தியோ, விமர்சனம் செய்தோ, பணியினை தடுக்கும் விதமாக தடைகளை ஏற்படுத்தியோ, குறிப்பிட்ட அதிகாரிகளை, அலுவலர்களை சமூக வலை தளங்களில் இழிவுபடுத்தும் வகையில் செயல்படும் தனிநபர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  
பொதுமக்கள் நீரின் அவசியத்தை புரிந்து கொண்டு, எதிர்கால சந்ததியினருக்காக நீர் நிலைகளை பாதுகாத்திடும் வகையில் நடைபெற்று வரும் இப்பணியினை தொடர்ந்து செயல்படுத்திட மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com