ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் முதல்முறையாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை

நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்முறையாக ஒரு நோயாளிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்முறையாக ஒரு நோயாளிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இது குறித்து, மருத்துவக் கல்லூரி முதன்மையர் (டீன்)  ஆர்.பாலாஜிநாதன், செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது: 
நிரந்தர சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்களுக்கு ரத்த சுத்திகரிப்பு (டயாலிசிஸ்),  சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என 2 விதமான சிகிச்சை முறைகள் உள்ளன.   இதில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை  நிரந்தர தீர்வளிக்கும். ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்முறையாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தைச் சேர்ந்த  தொழிலாளி  செல்வன் (28). இவருக்கு  2 சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், கடந்த ஓராண்டாக  இங்கு  டயாலிசிஸ் செய்து வந்தார். 
இந்நிலையில்,  செல்வனுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யலாம் என்று சிறுநீரகத் துறை மருத்துவர்கள் கூறிய அறிவுரையின்படி,  அவரது தாயார் தில்லைமணி (65)  சிறுநீரக தானம் செய்ய முன்வந்தார்.
இதைத் தொடர்ந்து, சிறப்பு சிறுநீரகத் துறை மருத்துவர்கள் பத்மகுமார், அருண்வர்கீஸ், சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவர்கள் பிராங்க் டேவிஸ், செல்வகுமார், ரத்த நாளத் துறை மருத்துவர் ராஜேஷ், மயக்கவியல் நிபுணர் எட்வர்ட் ஜான்சன் மற்றும் மருத்துவக் குழுவினர் செல்வனுக்கு கடந்த 3ஆம் தேதி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தனர். நான்கரை மணி நேரம் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சைக்குப்பின், செல்வனும், சிறுநீரகம் தானம் அளித்த அவரது தாயும் நலமாக உள்ளனர்.  முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இந்த அறுவை சிகிச்சை இலவசமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை செய்தால் ரூ. 8 லட்சம் வரை செலவாகும்.
எனவே, சிறுநீரக நோயாளிகள் இம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுச் செல்லலாம். சிறுநீரகவியல் புறநோயாளிகள் பிரிவு செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் செயல்படுகிறது என்றார் அவர்.
பேட்டியின்போது, உறைவிட மருத்துவர் ஆறுமுகவேலன், உதவி உறைவிட மருத்துவர்கள் கலைகுமார், ரெனிமோள்,  உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com