குமரி பகவதியம்மன் கோயில் நவராத்திரி திருவிழா: இன்று தொடக்கம்

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயில் நவராத்திரி திருவிழா ஞாயிற்றுக்கிழமை (செப். 29) தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது.


கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயில் நவராத்திரி திருவிழா ஞாயிற்றுக்கிழமை (செப். 29) தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நவராத்திரி திருவிழா 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம். இத்திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வரும் அக். 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஞாயிற்றுகிழமை அதிகாலை 5 மணிக்கு அபிஷேகம், 6 மணிக்கு அம்மன் கொலு மண்டபத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி, 9.30 மணிக்கு பஜனை, நண்பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு ஆன்மிகச் சொற்பொழிவு, இரவு 9 மணிக்கு அம்மன் வெள்ளிக் கலைமான் வாகனத்தில் கோயிலைச் சுற்றி பவனி வருதல் ஆகியவை நடைபெறும். திருவிழா நாள்களில் அம்மனுக்கு அபிஷேகம், அன்னதானம், ஆன்மிகச் சொற்பொழிவு, பஜனை, வாகன பவனி, இன்னிசை நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகிறது. 
 பரிவேட்டை: திருவிழாவின் கடைசி நாளான அக். 8 ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் தேவி வெள்ளிக்குதிரை வாகனத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தல், காலை 10.30 மணிக்கு அன்னதானம், தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் மகாதானபுரம் நோக்கி பரிவேட்டைக்கு ஊர்வலமாக புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெறும். 
இந்த ஊர்வலம் ரயில்நிலைய சந்திப்பு, விவேகானந்தபுரம்,  ஒற்றைப்புளி சந்திப்பு, பழத்தோட்டம், பரமார்த்தலிங்கபுரம், தங்க நாற்கர சாலை, போக்குவரத்து வளைவுச் சந்திப்பு வழியாக மகாதானபுரம் சென்றடைகிறது. அங்கு அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும். தொடர்ந்து நரிக்குளம் அருகே அமைந்துள்ள வேட்டை மண்டபத்தில் பணாசூரன் என்ற அரக்கனை அம்மன் வதம் செய்யும் பரிவேட்டை நிகழ்ச்சி நடைபெறும். இதில், தென் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.
ஆறாட்டு: இதையடுத்து பஞ்சலிங்கபுரம், மகாதானபுரம் வழியாக ஊர்வலம் கோயில் நோக்கி செல்கிறது. நள்ளிரவில் முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆறாட்டு நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து கோயில் கிழக்கு வாசல் திறந்து அம்மன் கோயிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
ஏற்பாடுகளை கன்னியாகுமரி மாவட்ட கோயில்களின் இணை ஆணையர் ம.அன்புமணி, நாகர்கோவில் தேவசம் தொகுதி கோயில்களின் கண்காணிப்பாளர் ஜீவானந்தம், பகவதியம்மன் கோயில் மேலாளர் ஆறுமுகநயினார்,  கன்னியாகுமரி பகவதியம்மன் பக்தர்கள் சங்கத்தினர் செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com