தேசிய நெடுஞ்சாலைகளை சீரமைக்கக் கோரி காங்கிரஸார் மறியல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை,  மாநிலச் சாலைகளை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி வில்லுக்குறி சந்திப்பில் காங்கிரஸ் கட்சி சார்பில் சனிக்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.


கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை,  மாநிலச் சாலைகளை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி வில்லுக்குறி சந்திப்பில் காங்கிரஸ் கட்சி சார்பில் சனிக்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழி -களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலை, மாநிலச் சாலைகள், குளச்சல் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட  நகர்புற, கிராமச் சாலைகள் மற்றும் இம்மாவட்டத்தின் அனைத்து சாலைகளும்  பழுதடைந்து வாகனங்கள் செல்ல முடியாத வகையில் காட்சியளிக்கின்றன. இதனால் விபத்துகளும் உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது.
மேலும், போக்குவரத்து நெரிசல் காரணமாக பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து, மத்திய, மாநில அரசுகளை கண்டித்து  காங்கிரஸ் கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, குளச்சல் சட்டப்பேரவை உறுப்பினர் ஜே.ஜி. பிரின்ஸ் தலைமையில் வில்லுக்குறி சந்திப்பில் காங்கிரஸ் கட்சியினர் திரண்டனர். மறியல் போராட்டம் நடத்த போலீஸார் அனுமதிக்காததால், அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், கட்சியின் குமரி மேற்கு மாவட்டத் தலைவர் எஸ். ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன், நிர்வாகிகள் ஜெரால்டு கென்னடி, கிளாட்சன், டென்னிஸ்,  சந்திரசேகர்,  வேலுபிள்ளை, யூசுப்கான், மாவட்ட துணைத் தலைவர்கள் ஜாண் இக்னேசியஸ், புரோடிமில்லர், நகரத் தலைவர் ஹனுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் திடீரென தடையை மீறி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.  
போராட்டக்குழுவினருடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து அங்கு,  நெடுஞ்சாலைத்துறை உதவிக்கோட்டப் பொறியாளர் சின்னசாமி,  உதவிபொறியாளர் விஷ்ணு வர்த்தன், இளநிலை உதவியாளர் ஹெப்சிபாய் ஆகியோர் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்தனர். 
சட்டப்பேரவை உறுப்பினர்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க ரூ. 26.45 கோடி அனுமதிக்கப்பட்டு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளதாகவும், அப்பணி முடிவடைந்ததும் சாலைகள் சீரமைக்கப்படும் என உதவிக்கோட்டப் பொறியாளர் உறுதி அளித்தார். இதையடுத்து மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. போராட்டத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com