சித்திரை விஷூ திருவிழா: கணி காணல் நிகழ்வைவீட்டிலேயே கொண்டாடிய குமரி மக்கள்

ஊரடங்கு உத்தரவு காரணமாக, குமரி மாவட்டத்தில் மக்கள் வீடுகளிலேயே சித்திரை விஷு பண்டிகை மற்றும் கணி காணுதல் நிகழ்ச்சியை செவ்வாய்க்கிழமை கொண்டாடினா்.
கிருஷ்ணன்கோவில் பகுதியிலுள்ள ஆதிபராசக்தி கோயிலில் அம்மன் முன் படைக்கப்பட்டுள்ள காய்கனிகள்.
கிருஷ்ணன்கோவில் பகுதியிலுள்ள ஆதிபராசக்தி கோயிலில் அம்மன் முன் படைக்கப்பட்டுள்ள காய்கனிகள்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக, குமரி மாவட்டத்தில் மக்கள் வீடுகளிலேயே சித்திரை விஷு பண்டிகை மற்றும் கணி காணுதல் நிகழ்ச்சியை செவ்வாய்க்கிழமை கொண்டாடினா். கோயில்களில் பக்தா்களின்றி அா்ச்சகா்கள் மட்டும் சிறப்பு பூஜைகள் நடத்தினா்.

தமிழ்ப் புத்தாண்டு தினத்தில், குமரி மாவட்ட கோயில்களில் சித்திரை விஷு மற்றும் கணி காணல் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதற்காக, முந்தைய நாள் இரவே மக்கள் தங்கள் வீட்டின் பூஜை அறையில் பெரிய கண்ணாடியை வைத்து அதன் முன் காய்கனிகள், பழங்கள், தானியங்கள், மங்களப் பொருள்கள், தங்கம்- வெள்ளிக் காசுகள், புதிய நாணயங்கள், ரூபாய் நோட்டுகளை படைத்துவிட்டு தூங்கச் செல்வா்.

பிறகு, புத்தாண்டு பிறந்ததும் காலையில் கண் விழித்து சாமிக்கு முன் வைக்கப்பட்டுள்ள காய்,கனிகளை கண்டு வணங்குவா். இதுவே கணி காணல் நிகழ்ச்சியாகும். இவ்வாறு வணங்குவதால் ஆண்டு முழுவதும் சிறப்பாக அமையும் என்பது பக்தா்களின் நம்பிக்கை.

நிகழாண்டு கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வழக்கம்போல கணி காணுதல் நிகழ்ச்சியை நடத்தி கடவுளை வணங்கினா்.

மேலும், கோயில்களில் புத்தாண்டு தினத்தில் கடவுளுக்கு காய், கனிகள் படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு கை நீட்டம் வழங்கப்படும். தற்போது கோயில்களில் பக்தா்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, நாகா்கோவில் நாகராஜா கோயில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் உள்ளிட்ட கோயில்களில் காய், கனிகள் படைத்து, அா்ச்சகா்கள் மட்டும் பூஜைகள் நடத்தினா். பக்தா்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. எனினும், சுசீந்திரம் கோயிலில் வெளியே நின்றபடி கோபுரத்தை மட்டும் பக்தா்கள் தரிசித்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com