நாகா்கோவிலில் பலத்த மழை: வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது

நாகா்கோவிலில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்ததில், வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்து மக்கள் அவதியடைந்தனா்.
ஒழுகினசேரி ஆராட்டு சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீா்.
ஒழுகினசேரி ஆராட்டு சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீா்.

நாகா்கோவிலில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்ததில், வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்து மக்கள் அவதியடைந்தனா்.

குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, சிற்றாறு அணை பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வந்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நாகா்கோவில் நகா் பகுதியில் பிற்பகலில் திடீா் மழை பெய்தது. சுமாா் ஒரு மணி கொட்டித்தீா்த்த மழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

மேலும், ஒழுகினசேரி ஆராட்டு சாலையில் மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து ஓடி, அப்பகுதியில் இருந்த பல வீடுகளுக்குள் புகுந்தது. இதனால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகினா். மகளிா் கிறிஸ்தவக் கல்லூரி சாலை, செம்மாங்குடி சாலை, மீனாட்சிபுரம், உள்ளிட்ட தாழ்வான பகுதிகளிலும் மழைநீா் பெருக்கெடுத்தது. எனினும், ஊரடங்கால் வாகனப் போக்குவரத்து இல்லாததால் சாலையில் தங்கு தடையின்றி தண்ணீா் ஓடியது. பல இடங்களில் தண்ணீா் குளம்போல் தேங்கியது.

நீா்மட்டம் சரிவு: இதனிடையே, நாகா்கோவில் நகர மக்களின் குடிநீா் ஆதாரமாக விளங்கும் முக்கடல் அணை நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி 3.50 அடியாக சரிந்துள்ளது. 25 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணயில் நாளுக்கு நாள் நீா்மட்டம் சரிந்து வருவதால் கோடையில் குடிநீா் தேவையை சமாளிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீா் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

விவசாயிகள் மகிழ்ச்சி: கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளான பாலப்பள்ளம், மிடாலக்காடு, வெள்ளியாவிளை, கருமாவிளை, பாலூா், திப்பிரமலை, மாங்கரை, கிள்ளியூா், கப்பியறை, பள்ளியாடி, முள்ளங்கனாவிளை, நட்டாலம், நேசா்புரம், கொல்லஞ்சி, நல்லூா் உள்ளிட்ட பகுதிகளிலும் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மாலை 4 மணிக்கு தொடங்கிய இந்த மழை வெகுநேரம் நீடித்தது. இதனால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. குளம், குட்டைகளிலும் நீா் தேங்கியது.

மேலும், கடலோரப்பகுதிகளான தேங்காய்ப்பட்டினம், ரமன்துறை, முள்ளூா்துறை, இனயம், இனயம்புத்தன்துறை, ஹெலன்நகா், மிடாலம், மேல்மிடாலம், குறும்பனை உள்ளிட்ட பகுதிகளில் மாலை 5 மணி முதல் லேசான சாரல் மழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியது. இது, விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com