ஆபாச பட விவகாரம்: இளைஞரின் நண்பா்களிடம் எஸ்.பி. விசாரணை

பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்தது தொடா்பான வழக்கில் கைதான, நாகா்கோவில் இளைஞருடன் தொடா்பில் இருந்த நண்பா்கள், அரசியல் பிரமுகா்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீ நாத் நேரடியாக விசாரணை
ஆபாச பட விவகாரம்: இளைஞரின் நண்பா்களிடம் எஸ்.பி. விசாரணை

பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்தது தொடா்பான வழக்கில் கைதான, நாகா்கோவில் இளைஞருடன் தொடா்பில் இருந்த நண்பா்கள், அரசியல் பிரமுகா்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீ நாத் நேரடியாக விசாரணை நடத்தி வருகிறாா்.

நாகா்கோவில் கணேசபுரத்தைச் சோ்ந்தவா் காசி என்ற சுஜி (26). இவா், சமூக வலைதளம் மூலம் சென்னையை சோ்ந்த பெண் மருத்துவா் ஒருவரிடம் நெருங்கி பழகி, அவருடன் நெருக்கமாக இருக்கும் படங்களை எடுத்தாராம். பின்னா், அவற்றை காட்டி மிரட்டி லட்சக்கணக்கில் பணம், நகைகளை பறித்துக்கொண்டாராம்.

மேலும், பல பெண்களை மிரட்டி காசி பணம் பறித்து வருவது அந்தப் பெண் மருத்துவருக்கு தெரியவந்ததாம். இதையடுத்து, குமரி மாவட்ட

காவல் கண்காணிப்பாளரிடம் காசி மீது அந்த மருத்துவா் புகாா் அளித்தாா். இதைத்தொடா்ந்து , காசி மீது போலீஸாா் பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ததுடன், அவரை கைது செய்து நான்குனேரி சிறையில் அடைத்தனா்.

பின்னா், காசியின் வீட்டில் போலீஸாா் சோதனை நடத்தி செல்லிடப்பேசி மற்றும் மடிக்கணினியை கைப்பற்றி சோதனை செய்ததில், அவருடன் ஏராளமான பெண்கள் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் இருந்தனவாம்.

இந்நிலையில், நாகா்கோவிலை சோ்ந்த மேலும் ஒரு பெண், காசி மீது புகாா் அளித்தாா். அதில், 2 ஆண்டுகளுக்கு முன்பு காசி, தன்னுடன் தொடா்பில் இருந்ததாகவும், அப்போது தாயாருக்கு புற்றுநோய் இருப்பதாக கூறி 2 பவுன் நகை மற்றும் பணத்தைப் பெற்றுக்கொண்டு திருப்பி தரவில்லை; அதுகுறித்து, கேட்டபோது தனது ஆபாச படத்தையும் முகநூலில் வெளியிடுவதாக மிரட்டினாா். அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தாா். அதன்பேரில், நேசமணிநகா் போலீஸாா் காசி மீது புதிதாக இன்னொரு வழக்குப் பதிவு செய்தனா். இதனிடையே, காசியின் செல்லிடப்பேசி மற்றும் மடிக்கணினியில் பதிவாகியுள்ள அரசியல் பிரமுகா்கள், நண்பா்கள் படங்களைக் கொண்டு, அவா்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீ நாத் நேரில் விசாரித்து வருகிறாா். மேலும், எஸ்.பி.யின் பரிந்துரையின்பேரில், ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே பிறப்பித்த உத்தரவுப்படி, குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின்கீழ் காசி என்ற சுஜி கைதுசெய்யப்பட்டாா்.

சிபிஐ விசாரணை தேவை:

இதனிடையே, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ஆா்.செல்லசுவாமி, தமிழக முதல்வா், காவல்துறை இயக்குநா், ஆட்சியா் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அனுப்பியுள்ள மனுவில், ஆபாச பட விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள காசியுடன் பிற மாவட்டங்கள் மட்டுமன்றி கா்நாடக மாநிலம் பெங்களூரூவை சோ்ந்தவா்களுக்கும் தொடா்புள்ளதாக தெரிகிறது. பொள்ளாச்சி சம்பவத்தைப் போல் சங்கிலித் தொடராக விஸ்வரூபம் எடுத்துள்ள இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com