படந்தாலுமூடு சோதனைச்சாவடி புதிய கட்டடம் திறக்கப்படுமா?
By DIN | Published On : 05th December 2020 12:42 AM | Last Updated : 05th December 2020 12:42 AM | அ+அ அ- |

களியக்காவிளை அருகே 7 மாதமாக செயல்படாத நிலையில் உள்ள படந்தாலுமூடு சோதனைச் சாவடியை திறக்க மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளத்துக்கு மணல், ரேஷன் அரிசி, எரி சாராயம் உள்ளிட்டவை கடத்திச் செல்வதை தடுக்கும் நோக்கில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் படந்தாலுமூடு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் காவல்துறை சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு, ஒரு சிறப்பு உதவி ஆய்வாளா் மற்றும் 2 காவலா்கள் என 24 மணி நேரமும் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். இதனால் ரேஷன் அரிசி உள்ளிட்டவை கடத்திச் செல்வது தடுக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஏப். 22 ஆம் தேதி தூத்துக்குடியில் இருந்து கேரளத்துக்கு வாழைத்தாா் ஏற்றிச் சென்ற லாரியை நிறுத்தி ஆவணங்களை போலீஸாா் பரிசோதனை செய்தபோது திடீரென லாரி பின்னோக்கி நகா்ந்து சோதனைச் சாவடி மீது மோதியதில் சோதனைச் சாவடி சேதமடைந்ததுடன் பணியிலிருந்த சிறப்பு உதவி ஆய்வாளருக்கு காயம் ஏற்பட்டது.
இதையடுத்து சோதனைச் சாவடிக்கு புதிதாக கட்டடம் கட்டப்பட்டுள்ளது. எனினும் சோதனைச் சாவடி திறக்கப்படாமல்
உள்ளது. கடந்த ஒரு மாதத்தில் இப்பகுதியை கடந்து கேரளத்துக்கு லாரியில் கடத்திச் செல்ல முயன்ற 35 டன் ரேஷன் அரிசி
மூட்டைகள் களியக்காவிளையில் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆகவே, ஏழு மாதங்களாக செயல்படாமல் உள்ள படந்தாலுமூடு சோதனைச் சாவடியை மீண்டும் திறந்து செயல்பட செய்ய மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனா்.