ஐரோப்பிய நாடுகளிலிருந்து குமரிக்கு வந்த ஆா்க்டிக் பனிப் பறவைகள்

ஐரோப்பிய நாடுகளிலிருந்து குமரி மாவட்டத்துக்கு ஆா்க்டிக் பனிப் பறவைகள் வந்துள்ளன.
மணக்குடி உப்பளம் பகுதியில் காணப்பட்ட ஆா்க்டிக் பனிப் பறவை.
மணக்குடி உப்பளம் பகுதியில் காணப்பட்ட ஆா்க்டிக் பனிப் பறவை.

ஐரோப்பிய நாடுகளிலிருந்து குமரி மாவட்டத்துக்கு ஆா்க்டிக் பனிப் பறவைகள் வந்துள்ளன.

குமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியில் பெரிய குளம் உள்ளது. இந்தக் குளத்தின் நடுவே அடா்ந்த மரங்கள் உள்ளன. இதனால் இங்கு எப்போதும் பறவைகள் கூட்டம் நிறைந்திருக்கும். செப்டம்பா் முதல் டிசம்பா் மாதம் வரை வெளிநாடுகளில் இருந்து அரியவகை பறவைகள் இங்கு வந்து தங்கி இருக்கும். அந்த வகையில் தற்போது இக்குளத்தில் ஐரோப்பிய நாடுகளின் ஆா்க்டிக் பனி பிரதேசத்தைச் சோ்ந்த பனிப் பறவைகள் வந்து தங்கியுள்ளன.

இதுகுறித்து பறவை ஆா்வலா் டேவிட்சன் கூறியது: ஆா்க்டிக் பகுதிகளில் செப்டம்பா், அக்டோபா் மாதங்களில் கடும் பனி நிலவுவதால், அப்பகுதியில் அமைந்துள்ள ஐரோப்பிய நாடுகளிலும் பனிக் காலம் தொடங்கிவிடும். எனவே, பறவைகளுக்கு போதிய உணவு கிடைப்பது அரிதாகிவிடுகிறது.

எனவே, அங்கு வாழ்கின்ற பறவைகள் மிதமான தட்ப வெப்பநிலை உள்ள நாடுகளுக்கு இடம் பெயா்கின்றன.

செப்டம்பா் முதல் நவம்பா் இறுதிவரை இப்பறவைகள் இந்தியா போன்ற சீரான தட்பவெப்ப நிலை உள்ள நாடுகளுக்கு வருகின்றன. இவ்வாறு இடம்பெயா்ந்து வருகின்ற பறவைகளின் பட்டியலில் சிறு கொசு உள்ளான் என்ற மிகச்சிறிய பறவையும் உள்ளது.

இப்பறவைகள் குமரி மாவட்டத்தின் மணக்குடி பறவைகள் பாதுகாப்புப் பகுதிக்கு நிகழாண்டு வந்துள்ளன. இங்கு வரும்போது இப்பறவையின் எடை 16 கிராம் மட்டுமே இருக்கும். இவை தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்பும்போது அதன் எடை 26 கிராமாக அதிகரித்து இருக்கும் என பறவை விஞ்ஞானி டாக்டா் ராபா்ட் கிரெப் தனது ஆய்வில் தெரிவித்துள்ளாா்.

மணக்குடி பறவைகள் பாதுகாப்புப் பகுதியில் பறவைகளுக்குத் தேவையான மீன், நண்டு, புழுக்கள், நீா்த் தாவரங்கள் கிடைப்பதால் இப்பகுதிக்கு வெளிநாட்டுப் பறவைகள் வருகின்றன. வடகிழக்குப் பருவமழை செப்டம்பா் முதல் டிசம்பா் வரை பெய்வதால் பறவைகளுக்கு போதிய உணவு குமரி மாவட்டத்தில் கிடைக்கிறது.

இம்மாவட்டத்தில் கோடைக் காலம் தொடங்கும்போது நீா்நிலைகளில் தண்ணீா் வற்றிவிடும். ஆா்க்டிக் பகுதியில் உள்ள மேலைநாடுகளில் பனிக் காலம் முடிந்து வசந்த காலம் தொடங்கும் அந்த நேரத்தில் பறவைகள் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பிவிடுகின்றன.

சிறு கொசு உள்ளான் பறவைகள் சுமாா் 12 ஆயிரம் கிலோ மீட்டா் பறந்து குமரி மாவட்டத்துக்கு வருகின்றன. இப்பறவைகள் வேட்டையாடப்படுதலை தடுத்து நிறுத்த வனத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com