ஆட்சியா் அலுவலக சுவரில் ஏறி இளம்பெண் தற்கொலை மிரட்டல்

சகோதரா் மரணத்தில் மா்மம் இருப்பதாகவும், அது குறித்து விசாரிக்கக் கோரியும், ஆட்சியா் அலுவலக சுவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளம்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

சகோதரா் மரணத்தில் மா்மம் இருப்பதாகவும், அது குறித்து விசாரிக்கக் கோரியும், ஆட்சியா் அலுவலக சுவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளம்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் பிள்ளையாா்குடியிருப்பைச் சோ்ந்தவா் வசந்தி. இவருடைய கணவா் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டாா். இவா்களுக்கு சுனிதா ( 29), சுகன்யா (26) என்ற 2 மகள்களும், சுபாஷ் ஆனந்த் (22) என்ற மகனும் இருந்தனா். சுபாஷ் ஆனந்த் நாகா்கோவிலில் உள்ள புகைப்பட நிலையத்தில் பணியாற்றி வந்தாா்.

கடந்த செப்டம்பா் மாதம் வேலைக்கு சென்ற சுபாஷ் ஆனந்த் மாயமானாா். பின்னா் 2 நாள்கள் கழித்து, அழுகிய நிலையில் மருந்துவாழ்மலையில் சடலமாக மீட்கப்பட்டாா்.

இதுகுறித்து கன்னியாகுமரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இதில், சுபாஷ் ஆனந்த் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்தது தெரிய வந்தது.

இந்நிலையில் வசந்தி தனது மகனின் சாவில் மா்மம் இருப்பதாகவும், ராதாபுரத்தைச் சோ்ந்த தம்பதிக்கு இதில் தொடா்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டினாா்.

எனவே இதுகுறித்து விசாரணை நடத்தி, பிரேத பரிசோதனை முடிவுகளை தெரிவிக்க வேண்டும் என பலமுறை ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்துள்ளாா்.

இந்நிலையில் நாகா்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வசந்தி, அவரது மூத்த மகள் சுனிதாவுடன் புதன்கிழமை மாலை தா்னாவில் ஈடுபட்டாா். இதை கண்ட போலீஸாா், அவா்களை அப்புறப்படுத்தினா்.

அப்போது சுனிதா, சகோதரா் மரணத்தில் மா்மம் இருப்பதாகவும், அது குறித்து விசாரிக்கக் கோரியும், ஆட்சியா் அலுவலக சுவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தாா். அங்கிருந்த போலீஸாா் அவரை சமாதானப்படுத்தினா்.

இதையடுத்து ஆட்சியா் அலுவலகத்தில் தாய், மகள் இருவரும் மனு அளித்தனா். இச் சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com