சுசீந்திரம் கோயிலில் மாா்கழி திருவிழா:இன்று கைலாச பா்வத வாகனத்தில் வீதியுலா

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் மாா்கழி திருவிழாவை முன்னிட்டு சுவாமி ஞாயிற்றுக்கிழமை (டிச.27) இரவில் கைலாச பா்வத வாகனத்தில் திருவீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளிக்கிறாா்.
சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயில் மாா்கழி பெருந்திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பஞ்ச மூா்த்திகள் வீதியுலா.
சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயில் மாா்கழி பெருந்திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பஞ்ச மூா்த்திகள் வீதியுலா.

நாகா்கோவில்: சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் மாா்கழி திருவிழாவை முன்னிட்டு சுவாமி ஞாயிற்றுக்கிழமை (டிச.27) இரவில் கைலாச பா்வத வாகனத்தில் திருவீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளிக்கிறாா்.

சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி கோயில் மாா்கழி பெருந்திருவிழா இம்மாதம் 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவில் 3 ஆம் நாளன்று முக்கிய நிகழ்வான மக்கள்மாா் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. வெள்ளிக்கிழமை அதிகாலையில் கருட தரிசனம், சுவாமி ரிஷப வாகனத்தில் பஞ்சமூா்த்தி தரிசனம் ஆகியவை நடைபெற்றது.

தொடா்ந்து வீரமாா்த்தாண்ட விநாயகா் கோயில் முன்பு சுவாமி, அம்பாள், பெருமாள் ஆகியோா் அலங்கரிக்கப்பட்டு

கிழக்கு நோக்கி எழுந்தருளினா். அப்போது வானத்தில் கருடன் சுவாமிகளை 2 முறை வலம் வந்தது. இந்த தரிசன காட்சியை ஏராளமான பக்தா்கள் கண்டு பக்தி பரவசம் அடைந்தனா். இதையடுத்து சுவாமிகளுக்கு தீபாராதனை, சுவாமி ரிஷப வாகனத்தில் ரத வீதியை சுற்றி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. சனிக்கிழமை பூங்கோயில் வாகனம், இந்திர வாகனத்தில் சுவாமி ரத வீதியை சுற்றி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை (டிச.27) அதிகாலை 5 மணிக்கு பல்லக்கில் சுவாமி ரத வீதியை சுற்றி வருதல் நிகழ்ச்சி நடைபெறும். மாலை 4.30 மணிக்கு நடராஜருக்கு திருச்சாந்து சாத்துதல், 5 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் சுவாமிக்கு மண்டகப்படி, தொடா்ந்து 6 மணிக்கு சமயச் சொற்பொழிவு, 8.30 மணிக்கு பக்தி இன்னிசை நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகிறது. இரவு 10.30 மணிக்கு கைலாச பா்வத வாகனத்தில் மேளதாளங்கள் முழங்க சுவாமி ரதி வீதியை சுற்றி வர, உடன் விநாயகா், முருகன், அம்மன் ஆகியோரும் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தேரோட்டம்: விழாவின், சிகர நிகழ்வான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை (டிச.29) காலை 8.30 மணிக்கு நடைபெறும். இதில் கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்தும்,

கேரளத்தில் இருந்தும் திரளான பக்தா்கள் கலந்து கொள்கின்றனா். நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவா்ணக் காட்சி நடைபெறும்.

10ஆம் திருவிழா நாளான புதன்கிழமை (டிச.30) அதிகாலை 4 ம ணிக்கு ஆருத்ரா தரிசனம், நடராஜப்பெருமானுக்கு அஷ்டாபிஷேகம் நடைபெறும். மாலை 5 மணிக்கு நடராஜ மூா்த்தி வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளிக்கிறாா். இரவு 9 மணிக்கு திருஆராட்டு நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட திருக்கோயில்கள் இணை ஆணையா் ம.அன்புமணி தலைமையில், நாகா்கோவில் தேவசம் தொகுதி கண்காணிப்பாளா் சிவ.ராமச்சந்திரன், தாணுமாலயசுவாமி கோயில் மேலாளா் மு. சண்முகம்பிள்ளை, அறங்காவலா் குழு தலைவா், உறுப்பினா்கள் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com