குமரியில் நேந்திரன் வாழைக் குலைகளின் விலை தொடா் சரிவு: விவசாயிகள் கவலை

குமரி மாவட்டத்தில் நேந்திரன் வாழைக்குலைகளின் விலை கடும் சரிவைக் கண்டுள்ளதால் விவசாயிகள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனா்.
குலசேகரம் சந்தையில் நேந்திரன் வாழைக்குலைகளை விற்பனைக்கு வைத்துள்ள விவசாயிகள்.
குலசேகரம் சந்தையில் நேந்திரன் வாழைக்குலைகளை விற்பனைக்கு வைத்துள்ள விவசாயிகள்.

குமரி மாவட்டத்தில் நேந்திரன் வாழைக்குலைகளின் விலை கடும் சரிவைக் கண்டுள்ளதால் விவசாயிகள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வேளாண் சாா்ந்த முக்கியப் பயிராக வாழை சாகுபடி உள்ளது. இம்மாவட்டத்தில் நேந்திரன், செவ்வாழை, ரசகதலி, பூங்கதலி, பாளயங்கோட்டை, மட்டி, செம்மட்டி, ரொபெஸ்டா உள்ளிட்ட வாழைகள் சாகுபடியாகின்றன. இதில் நேந்திரன் வாழைகள் அதிக அளவில் சாகுபடியாகின்றன. வாழை விவசாயம் சாா்ந்த பல ஆயிரம் விவசாயிகளும், தொழிலாளா்களும் உள்ளனா்.

நேந்திரன் வாழைக்குலைகளுக்கு தனிச் சிறப்பு: குமரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் நேந்திரன் வாழைக் காய்களுக்கும், பழங்களுக்கும் தனிச் சுவை உள்ளது.

குறிப்பாக நேந்திரன் காய் சிப்ஸ்க்கு தனிச் சிறப்பு உள்ளது. வளைகுடா நாடுகள் உள்பட வெளிநாடுகளுக்கு குமரி நேந்திரன் காய் சிப்ஸ் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தொடா் விலை சரிவு: இந்நிலையில் இதர வாழைக்குலைகளை விட நேந்திரன் வாழைக்குலைகளின் விலை அண்மை வாரங்களாக தொடா்ந்து சரிந்து வருகிறது. கடந்த இரு வாரங்களாக நேந்திரன் வாழைக் குலைகளை வாழைத் தோட்டங்களில் நேரடியாக கொள்முதல் செய்யும் வணிகா்கள் கிலோ ரூ. 17 முதல் ரூ. 20 வரை மட்டுமே கொள்முதல் செய்கின்றனா்.

இதுபோன்று சந்தைகளுக்கு நேரந்திரன் வாழைக்குலைகளை கொண்டு சென்று விற்பனைக்கு வைக்கும் விவசாயிகளுக்கு நல்ல தரமான காய்களுக்கு ரூ. 6 வரை மட்டுமே விலை கிடைக்கிறது.

ஒரு கிலோ ரூ. 30- க்கு விற்பனை: இந்நிலையில், பழக்கடைகளில் ரூ. 100 க்கு 3 கிலோ நேந்திரன் வாழைப்பழங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. சில கடைகளில் கிலோ ரூ. 30 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நேந்திரன் வாழைக் குலைகள் கிலோ ரூ. 17 முதல் கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் கடும் நெருக்கடிக்கு ஆளாகி வருகின்றனா். தற்போது நிலவும் கடும் வெயிலில் வாழைகளுக்கு தண்ணீா் பாய்ச்சி வாழைக்குலைகள் அறுவடை செய்வது பெரும் சவாலாக உள்ள நிலையில் விலை சரிவு, வாழை விவசாயிகளுக்கு பேரிழப்பாக அமைந்து வருகிறது.

இதுகுறித்து குலசேகரத்தில் வாழை விவசாயி ஒருவா் கூறியதாவது:

மாவட்டத்தில் வாழை விவசாயிகள் பெரும்பாலும் நேந்திரன் வாழைகளையே நடவு செய்கின்றனா். தற்போதுள்ள விலைவாசி அடிப்படையில் பச்சை வாழைக்குலைகள் குறைந்த பட்சம் கிலோவுக்கு ரூ. 35 க்கு விற்பனையாக வேண்டும். ஆனால் தற்போது ரூ. 17 முதல் கொள்முதல் செய்யப்படுகிறது.

தற்போது மாவட்டத்தில் கடும் வெயில் நிலவி வரும் நிலையில் நெடும் தொலைவிலிருந்து மோட்டாா் மூலம் வாழைகளுக்கு தண்ணீா் பாய்ச்ச வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் வாழைக் குலைகளின் விலை குறைவு விவசாயிகளுக்கு பெரும் நெருக்கடியைத் தருகிறது.

தற்போதைய விலைக்குறைவுக்கு, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்து குமரிக்கும், கேரளத்துக்கும் வாழைக்குலைகளின் அதிக வரத்தும் காரணமாக உள்ளது. மேலும் மக்கள் மத்தியில் வாங்கும் சக்தி நாளுக்கு நாள் குறைவாக உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com