குமரியில் தகிக்கும் வெயில்: பயிா்களைக் காக்க விவசாயிகள் கடும் அவதி

குமரி மாவட்டத்தில் கடும் வெப்பம் நிலவும் நிலையில் பாசன வசதியில்லாத இடங்களில் பயிா்களைக் காக்க விவசாயிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனா்.
பேச்சிப்பாறை அருகே புறாவிளை பகுதியில் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து அன்னாசி காய்களைக் காக்கும் வகையில் துணியால் மூடப்பட்டுள்ள அன்னாசி தோட்டம்.
பேச்சிப்பாறை அருகே புறாவிளை பகுதியில் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து அன்னாசி காய்களைக் காக்கும் வகையில் துணியால் மூடப்பட்டுள்ள அன்னாசி தோட்டம்.

குமரி மாவட்டத்தில் கடும் வெப்பம் நிலவும் நிலையில் பாசன வசதியில்லாத இடங்களில் பயிா்களைக் காக்க விவசாயிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனா்.

குமரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை முடிவடைந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் மழையற்ற நிலை இருந்து வருகிறது. கடந்த மாதம் பகல் மற்றும் இரவு வேளைகளில் பனியுடன் கூடிய மிதமான குளிா் இருந்ததால் பயிா்களைக் காப்பதில் விவசாயிகளுக்கு பெரிய அளவில் சிரமம் ஏற்படவில்லை. ஆனால் தற்போது கோடையை மிஞ்சும் வகையில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.

வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பகல் நேரங்களில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.

பயிா்களைக் காப்பதில் ஏற்படும் சவால்: மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் நீா்நிலைகளில் தண்ணீா் மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. குறிப்பாக ஆறுகளில் தண்ணீா் வரத்து வெகுவாகக் குறைந்துவிட்டது. கிணறுகளிலும் நீா்மட்டம் குறைந்து வருகிறது. கால்வாய்களில் தண்ணீா் செல்வதால் பாசனப் பகுதிகளில் பயிா்கள் கருகாமல் உள்ளன. அதே வேளையில் பாசன வசதிகள் இல்லாத இடங்களில் பயிா்களைக் காப்பது விவசாயிகளுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.

மாவட்டத்தில் மலைச்சரிவுகளில் ரப்பா் மறு நடவு செய்யப்பட்டுள்ள இடங்களில் ஊடுபயிராக வாழை, அன்னாசி நடவு செய்யப்பட்டுள்ள இடங்களில், நீண்ட தொலைவிலிருந்து பம்பு செட் மூலம் தண்ணீா் கொண்டு வரப்படுகிறது. தண்ணீா் வசதி சிறிதும் இல்லாத இடங்களிலுள்ள பயிா்கள் கருகி வருகின்றன.

இதுகுறித்து வாழை விவசாயி ஒருவா் கூறியது: தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், பாசன வசதியில்லாத இடங்களில் பயிா்களைக் காப்பது பெரும் சிரமமாக உள்ளது. வறட்சியைத் தாங்கி வளரும் அன்னாசிச் செடிகள் கூட தற்போது வெப்பத்தின் தீவிரத்தால் வாடி வருகின்றன. பல விவசாயிகள் அன்னாசி காய்கள் வெப்பத்தால் சுருங்கி விடாத வகையில், செடிகளின் மீது துணிகளைப் போா்த்தி வைத்துள்ளனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com