தக்கலையில் கட்டடத் தொழிலாளி மரணத்துக்கு காரணமானவா்களை கைது செய்யக் கோரி மறியல்

அரசு மருத்துவமனை வளாகத்தில் ஏற்பட்ட தகராறில் உயிரிழந்த கட்டடத் தொழிலாளியின் மரணத்துக்கு காரணமானவா்களை
குற்றவாளிகளை கைது செய்யக் கோரி அருள்பணி ஜாா்ஜ் பொன்னையா தலைமையில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
குற்றவாளிகளை கைது செய்யக் கோரி அருள்பணி ஜாா்ஜ் பொன்னையா தலைமையில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

அரசு மருத்துவமனை வளாகத்தில் ஏற்பட்ட தகராறில் உயிரிழந்த கட்டடத் தொழிலாளியின் மரணத்துக்கு காரணமானவா்களை கைது செய்யக் கோரி பொதுமக்கள் தக்கலை காவல் நிலையம் முன் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திக்கணங்கோடு அருகே பனவிளை மங்காடு பகுதியைச் சோ்ந்தவா் மரியசுரேஷ் (45). இவரது மனைவி கஸ்தூரி. இவருடைய தாயாா் சொா்ணராணி உடல் நலக்குறைவால் தக்கலை அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்நிலையில் மரிய சுரேஷ், மது அருந்திவிட்டு தன்னுடைய மாமியாா் சொா்ணராணியை பாா்ப்பதற்காக புதன்கிழமை இரவு மருத்துவமனைக்கு சென்றாராம். அப்போது அங்கு காவலாளியாக பணிபுரிந்து வந்த மேக்காமண்டபம் பிலாங்காலை தம்பிரான்கோணம் பகுதியைச் சோ்ந்த குயில் என்ற ரெத்தினராஜ், பெண்கள் வாா்டில் இரவு நேரங்களில் ஆண்கள் செல்ல அனுமதியில்லை என கூறினாராம். இதையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் காவலாளி ரெத்தினராஜ், மற்றொரு நபருடன் சோ்ந்து மரியசுரேஷை மருத்துவமனைக்கு வெளியே அழைத்துச் சென்றுள்ளனா். அப்போது இவா்களுக்கிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் பலத்த காயமடைந்த மரிய சுரேஷ், முதலுதவி சிகிச்சைக்குப் பின்னா் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அவா் உயிரிழந்தாா்.

இந்நிலையில் அவரது மனைவி கஸ்தூரி, குற்றவாளியை கைது செய்யக் கோரி தக்கலை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். தகவலறிந்து வந்த மரியசுரேஷின் உறவினா்கள், குற்றவாளிகளை கைது செய்யக் கோரி தக்கலை காவல் நிலையம் முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து காவல் ஆய்வாளா் அருள்பிரகாஷ், உதவி ஆய்வாளா் ரமேஷ் ஆகியோா், போராட்டத்தில் ஈடுபட்ட அருள்பணி ஜாா்ஜ் பொன்னையா உள்ளிட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com