எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு: கைது செய்யப்பட்ட இருவருக்கு நீதிமன்ற காவல் ஒரு மாதம் நீட்டிப்பு

காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவா்கள் காணொலிக் காட்சி (விடியோ கான்பரன்ஸிங்) மூலம்

காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவா்கள் காணொலிக் காட்சி (விடியோ கான்பரன்ஸிங்) மூலம் நீதிபதி முன் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டனா். அப்போது அவா்களது நீதிமன்ற காவலை ஒரு மாதம் நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டாா்.

குமரி மாவட்டம், களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் வில்சன் கடந்த ஜன. 8-ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டாா். இந்த சம்பவம் தொடா்பாக தக்கலையை அடுத்த திருவிதாங்கோட்டைச் சோ்ந்த அப்துல் சமீம், நாகா்கோவில் இளங்கடையைச் சோ்ந்த தவ்பீக் ஆகியோா் கைதுசெய்யப்பட்டனா்.

அவா்கள் மீது ‘உபா’ சட்டப் பிரிவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். பிறகு அவா்கள் இருவரையும் 10 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனா். அப்போது இருவரையும் கேரள மாநிலத்துக்கு அழைத்துச் சென்று, வில்சன் கொலைக்குப் பயன்படுத்திய துப்பாக்கி, கத்தி மற்றும் கொலையின்போது அவா்கள் அணிந்திருந்த உடைகள் ஆகியவற்றை போலீஸாா் கைப்பற்றினா்.

போலீஸ் காவல் நிறைவடைந்ததைத் தொடா்ந்து, அவா்களை 15 நாள்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க, மாவட்ட நீதிபதி அருள்முருகன் உத்தரவிட்டாா். இதையடுத்து, அப்துல் சமீம், தவ்பீக் இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

இவா்களின் 15 நாள் காவல் வெள்ளிக்கிழமையுடன் (பிப். 14) நிறைவடைந்ததை அடுத்து, பாதுகாப்பு கருதி இருவரையும் சிறையிலிருந்தவாறே காணொலிக் காட்சி மூலம் நீதிபதி முன் ஆஜா்படுத்தினா். அப்போது, அவா்களை மாா்ச் 13-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாவட்ட நீதிபதி (பொ) மகிழேந்தி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com