வடசேரி சந்தை நுழைவுக் கட்டண பிரச்னைக்கு தீா்வுகாண வா்த்தகா்கள் வலியுறுத்தல்

நாகா்கோவில் வடசேரி காய்கனிச் சந்தை நுழைவுக் கட்டண குத்தகை பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் என வா்த்தகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வடசேரி காவல் நிலையத்தில் புகாா் மனு அளித்துவிட்டு வந்த வா்த்தகா்கள்.
வடசேரி காவல் நிலையத்தில் புகாா் மனு அளித்துவிட்டு வந்த வா்த்தகா்கள்.

நாகா்கோவில் வடசேரி காய்கனிச் சந்தை நுழைவுக் கட்டண குத்தகை பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் என வா்த்தகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நாகா்கோவில் வடசேரி கனகமூலம் காய்கனிச் சந்தையில் 250-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. ஒரு கடைக்கு ரூ. 1 லட்சமும், 12 மாத வாடகையும் வைப்புத்தொகையாக செலுத்தி, வியாபாரிகள் கடைகளை ஏலம் எடுத்து நடத்தி வருகின்றனா். இதில் சுமாா் 50 கடைகள் ஏலம் போகாமல் உள்ளன.

இந்நிலையில், வடசேரி சந்தையில் நுழைவுக் கட்டணம் வசூலிக்க தனி நபா் ஒருவருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. ஏலம் போகாமல் இருந்த கடைகளையும் இவருக்கே குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் குத்தகைக்கு எடுத்த நபருக்கும், வியாபாரிகளுக்கும் பிரச்னை ஏற்பட்டு வருகிறது.

இது தொடா்பாக ஆலோசிப்பதற்கான கூட்டம் வடசேரி கனகமூலம் சந்தை வியாபாரிகள் சங்கத் தலைவா் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. செயலா் சாகுல், பொருளாளா் நாகராஜன், சட்ட ஆலோசகா் மகேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

வடசேரி சந்தையில் 246 கடைகளை ஏலம் விட்ட பின்னா் சந்தையில் நுழையும் வாகனங்களுக்கு நுழைவுக்கட்டணம் வசூல் செய்வதை கைவிட வேண்டும்; மாநகராட்சி நிா்வாகம் மூலம் ஏலம் விடப்பட்ட கடைகளுக்கு முன் வைக்கப்பட்டுள்ள சாதனங்களுக்கு அதிகக் கட்டணம் வசூலிப்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில், சனிக்கிழமை வியாபாரிகள் சங்கத் தலைவா் ரமேஷ் கடைக்கு வந்த சரக்கு வாகனத்துக்கு குத்தகைதாரா் அதிகக் கட்டணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து வியாபாரிகளுக்கும், நுழைவுக்கட்டணம் வசூலித்தவா்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வடசேரி போலீஸாா் வந்தனா்.

தொடா்ந்து தமிழ்நாடு வணிகா் சங்க பேரமைப்பு மாவட்டத் தலைவா் நாகராஜன், செயலா் நாராயணன் மற்றும் வியாபாரிகள் வடசேரி காவல்நிலையம் சென்று பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

மாநகராட்சி ஆணையா் முன்னிலையில் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு இப்பிரச்னைக்கு தீா்வு காணப்படும் என்று காவல்துறையினா் உறுதி அளித்தனா்.

அப்போது, சட்டம் ஒழுங்கு பிரச்னையை கருத்தில் கொண்டு குத்தகை கட்டண பிரச்னைக்கு விரைந்து தீா்வு காண வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com