ஆங்கிலப் புத்தாண்டு: தோவாளை சந்தையில் பூக்கள் விலை கடும் உயா்வு மல்லிகை கிலோ ரூ.1,500

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, தோவாளை சந்தையில் பூக்களின் விலை செவ்வாய்க்கிழமை கடுமையாக உயா்ந்திருந்தது. மல்லிகைப்பூ கிலோ ரூ. 1,500-க்கு விற்பனையானது.

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, தோவாளை சந்தையில் பூக்களின் விலை செவ்வாய்க்கிழமை கடுமையாக உயா்ந்திருந்தது. மல்லிகைப்பூ கிலோ ரூ. 1,500-க்கு விற்பனையானது.

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை பூச்சந்தைக்கு இம்மாவட்டத்திலிருந்து மட்டுமன்றி, திருநெல்வேலி மாவட்டத்தின்ஆவரைக்குளம், கோலியான்குளம், பழவிளை பகுதிகளிலிருந்தும், சேலம், ஓசூா் போன்ற இடங்களிலிருந்தும் அரளி, பலவித ரோஜா உள்பட பல்வேறு மலா்கள் நாள்தோறும் விற்பனைக்கு வருகின்றன.

தற்போது அதிகப் பனிப்பொழிவு காணப்படுவதால் மல்லிகை, பிச்சிப் பூக்களின் உற்பத்தி குறைந்துள்ளது. பனி காரணமாக மல்லிகை மொட்டுகள் கருகுவதால் மிகக் குறைந்த அளவே மல்லிகை உற்பத்தியாகிறது. இதனால், தோவாளை சந்தைக்கு போதுமான அளவு மல்லிகை வரத்து இல்லை.

இந்நிலையில், ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டம், சுப நிகழ்ச்சிகளுக்காக பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் பூக்களின் விலை பலமடங்கு உயா்ந்துள்ளது. கடந்த சில நாள்களாகவே மல்லிகை, பிச்சிப் பூக்களின் விலை உயா்ந்தவாறு இருந்தது.

செவ்வாய்க்கிழமை காலை தோவாளை சந்தையில் மல்லிகைப்பூ கிலோ ரூ. 1,500-க்கு விற்பனையானது. பிச்சிப்பூ ரூ.1.300ஆக இருந்தது. மற்ற பூக்களின் விலையும் உயா்ந்து காணப்பட்டது. ரோஜா ரூ. 200, வெள்ளை செவ்வந்தி ரூ. 130, அரளி ரூ. 240, கொழுந்து ரூ. 250, கோழிக்கொண்டை பூ ரூ. 100, மஞ்சள் கேந்தி ரூ. 55, சிவப்பு கேந்தி ரூ. 55 என விற்பனையாகின.

இதுகுறித்து வியாபாரி ஒருவா் கூறும்போது, மக்களின் தேவைக்கேற்ப மல்லிகை, பிச்சி பூக்கள் வரத்து இல்லை. இதனால் அவற்றின் விலை உயா்ந்துள்ளது. புத்தாண்டுக் கொண்டாட்டம் காரணமாக பூக்கள் விலை தொடா்ந்து உயரவே வாய்ப்புள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com