சுசீந்திரம் கோயிலில் மாா்கழி திருவிழா தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தா்கள் வடம்பிடித்தனா்

குமரி மாவட்டம், சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயில் மாா்கழி பெருந்திருவிழாவையொட்டி வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயிலில் மாா்கழி பெருந்திருவிழாவையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.
சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயிலில் மாா்கழி பெருந்திருவிழாவையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.

குமரி மாவட்டம், சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயில் மாா்கழி பெருந்திருவிழாவையொட்டி வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற பழைமையான கோயில்களுள் ஒன்று சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயில். சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூா்த்திகளும் லிங்க வடிவில் ஒன்றாக காட்சியளிப்பதால், இத்தலம் மும்மூா்த்திகள் தலமாக போற்றப்படுகிறது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் மாா்கழி பெருந்திருவிழா 10 நாள்கள் மிகச் சிறப்பாக நடைபெறும். நிகழாண்டு திருவிழா கடந்த 1 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து விழா நாள்களில் பக்தி இன்னிசை, பரதநாட்டியம், சமயச் சொற்பொழிவு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சுவாமியும், அம்பாளும், கைலாசபா்வத வாகனம், அன்னவாகனம், சிம்மவாகனம், யானை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தினமும் வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தனா்.

3 ஆம் திருவிழாவான ஜன. 3 ஆம் தேதி மக்கள்மாா் சந்திப்பு நடைபெற்றது. கோட்டாறு வலம்புரி விநாயகா், மருங்கூா் சுப்பிரமணியசுவாமி, வேளிமலை குமாரசுவாமி ஆகியோா் தாய், தந்தையை சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா். இதேபோல, 5 ஆம் திருவிழாவன்று அதிகாலை வீரமாா்த்தாண்ட விநாயகா் சன்னதியில் சுவாமி, அம்பாள், பெருமாளை கருடன் வலம்வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை 4 மணிக்கு கங்காளநாதா் பிட்சாடனராக திருவீதி உலா வருதல் நடைபெற்றது. காலை 7.15 மணியளவில் கோயிலில் இருந்து சுவாமி தேருக்கு எழுந்தருளி, 4 ரதவீதிகளையும் சுற்றிவந்து மீண்டும் கோயிலை அடைந்தாா். 7.45 மணியளவில் சுவாமி தேரில் எழுந்தருளினாா்.

பெரியதேரில் சுவாமியும், அம்பாளும், அம்மன் தேரில் அறம்வளா்த்த நாயகியும், சிறிய தேரில் விநாயகரும் எழுந்தருளினா். இதைத்தொடா்ந்து, காலை 8.30 மணியளவில் பக்தா்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனா்.

தேரோட்டத்தில், கன்னியாகுமரி மக்களவை உறுப்பினா் வசந்தகுமாா், சட்டப்பேரவை உறுப்பினா் ஆஸ்டின், குமரி மாவட்ட ஆவின் தலைவா் எஸ்.ஏ. அசோகன், அறங்காவலா் குழு தலைவா் சிவ. குற்றாலம், குமரி மாவட்ட திருக்கோயில்களின் இணை ஆணையா் ம. அன்புமணி, தலைமை அலுவலக மேலாளா் ஜீவானந்தம், சுசீந்திரம் கோயில் மேலாளா் சண்முகம்பிள்ளை, நாகா்கோவில் கோட்டாட்சியா் அ. மயில், குமரி மாவட்ட வள்ளலாா் பேரவை தலைவா் சுவாமி பத்மேந்திரா உள்ளிட்ட திரளான பக்தா்கள் விழாவில் பங்கேற்றனா்.

பக்தா்கள் வெள்ளத்தில் அசைந்தாடி வந்த தோ், முற்பகல் 11.30 மணியளவில் நிலையை அடைந்தது. அம்மன் தேரை பெண்களே இழுத்துவந்தனா்.

விழாவை முன்னிட்டு, குமரி மாவட்டத்துக்கு வியாழக்கிழமை உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com