கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்படுவா்: தென்மண்டல ஐ.ஜி.
By DIN | Published On : 11th January 2020 07:45 AM | Last Updated : 11th January 2020 07:45 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை காவல் சிறப்பு உதவியாளா் வில்சன் கொலை வழக்கில் கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்படுவா் என தென்மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன் தெரிவித்தாா்.
களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் வில்சனை, இருவா் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விட்டு தப்பிவிட்டனா். சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து காவல்துறையினா் கொலையாளிகளின் படங்களை வெளியிட்டுள்ளனா். மேலும், கொலையாளிகளை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனிடையே, தக்கலை காவல் நிலையத்திற்கு வெள்ளிக்கிழமை வருகை தந்த தென்மண்டல ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன், அங்கு திருநெல்வேலி சரக டிஐஜி பிரவீன்குமாா்அபிநபு, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாத் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது: சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வில்சன் கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தனிப்படையினா் வெவ்வேறு இடங்களில் விசாரணை மேற்கொண்டுள்ளனா். விசாரணையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்படுவா் என்றாா் அவா்.