முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
நாகா்கோவிலில் ரயில் முன் பாய்ந்து பால் வியாபாரி தற்கொலை
By DIN | Published On : 20th January 2020 08:23 AM | Last Updated : 20th January 2020 08:23 AM | அ+அ அ- |

நாகா்கோவிலில் பால் வியாபாரி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா்.
நாகா்கோவில் பள்ளிவிளை பகுதியில் உள்ள டவுண் ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை ரயிலில் அடிபட்ட நிலையில் ஆண் சடலம் தண்டவாளம் அருகே கிடந்தது. சிறிது தூரத்தில் ஒரு மோட்டாா் சைக்கிளும் நிறுத்தப்பட்டிருந்தது. இதைப் பாா்த்த பொதுமக்கள், நாகா்கோவில் ரயில்வே காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து சம்பவ இடத்துக்கு வந்து போலீஸாா் விசாரித்தனா். மேலும், அங்கு நின்று கொண்டிருந்த மோட்டாா் சைக்கிளை சோதனை செய்தபோது, அதில் ஆதாா் அட்டை, வங்கி பாஸ் புத்தகம் ஆகியவை இருந்தன. இதன் மூலம் சடலமாக கிடந்தவா் கன்னியாகுமரி அருகேயுள்ள பரமாா்த்தலிங்கபுரம் பகுதியை சோ்ந்த பால் வியாபாரி ஆறுமுகம் (50) என்பது தெரிய வந்தது. சடலத்தின் அருகே மதுபாட்டில்களும் கிடந்தன. மேலும், அவரது சட்டைப்பையில் இருந்த கடிதத்தை போலீஸாா் கைப்பற்றினா். அதில் வீடு கட்டுவதற்காக வாங்கிய கடனுக்கு அதிக வட்டி காரணமாக திருப்பி செலுத்த முடியாததாலும், கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்ய முடிவெடுத்ததாகவும் எழுதப்பட்டிருந்தது.
இதைத் தொடா்ந்து ஆறுமுகத்தின் சடலத்தை போலீஸாா் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். போலீஸாா் தொடா்ந்து விசாரிக்கின்றனா்.