முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
சாமித்தோப்பில் தைத் திருவிழா தேரோட்டம்
By DIN | Published On : 27th January 2020 06:19 PM | Last Updated : 27th January 2020 09:15 PM | அ+அ அ- |

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம், சாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் தைத் திருவிழாவின் 11-ஆம் நாளான திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
இப்பதியில் ஆண்டுதோறும் தை, வைகாசி மற்றும் ஆவணி ஆகிய 3 மாதங்களில் 11 நாள்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
நிகழாண்டு தைத் திருவிழா கடந்த 17-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் காலை, மாலையில் அய்யாவுக்குப் பணிவிடை, உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, அன்னதானம், வாகனபவனி, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 8-ஆம் நாளன்று அய்யா வெள்ளைக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி பதிவலம் வந்து முத்திரிக் கிணற்றின் அருகில் கலி வேட்டையாடினார்.
9-ஆம் நாள் திருநாளான சனிக்கிழமை (ஜன.25) அய்யா அனுமன் வாகனத்திலும், 10-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை இந்திர வாகனத்திலும் பவனி நடைபெற்றது.
தேரோட்டம்: 11-ஆம் நாள் திருவிழாவான திங்கள்கிழமை (ஜன. 27) தேரோட்டம் நடைபெற்றது. பகல் 12 மணிக்கு அய்யா தேருக்கு எழுந்தருளி தேரோட்டம் நடைபெற்றது. பலவண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்ட தேரை ஆயிரக்கணக்கான பக்தா்கள் நான்கு ரதவீதிகள் வழியாக வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
அப்போது பக்தர்கள் நீண்ட வரிசையில் அய்யாவுக்கு சுருள் வைத்து வழிபட்டனர். இரவு 8 மணிக்கு கலை நிகழ்ச்சியைத் தொடா்ந்து நள்ளிரவு கொடியிறக்கப்பட்டு பக்தா்களுக்கு இனிமம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை பாலஜனாதிபதி தலைமையில் பாலலோகாதிபதி, ராஜவேல், பால.லோக்பிரசாத், ஜனா.வைகுந்த், ஜனா.யுகேந்த் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.