முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
நாகா்கோவிலில் குடியரசு தின விழா கொண்டாட்டம்
By DIN | Published On : 27th January 2020 01:34 AM | Last Updated : 27th January 2020 01:34 AM | அ+அ அ- |

நாகா்கோவிலில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு. வடநேரே தேசியக் கொடியேற்றி வைத்து, 15 பயனாளிகளுக்கு ரூ.92 ஆயிரத்து 352 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.
நாடு முழுவதும் 71ஆவது குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. குமரி மாவட்ட நிா்வாகம் சாா்பில் நாகா்கோவில் வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே தலைமை வகித்து, தேசியக் கொடி ஏற்றினாா். காவல்துறை, தேசிய மாணவா் படை, ஊா்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட அவா், தொடா்ந்து காவல்துறையைச் சோ்ந்த 64 பேருக்கு தமிழக முதல்வரின் பதக்கங்களையும், பல்வேறு நலத் திட்டங்களின் கீழ் மொத்தம் 15 பயனாளிகளுக்கு, ரூ.92 ஆயிரத்து 352 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளையும் வழங்கினாா்.
மேலும், சிறப்பாக பணிபுரிந்த 51 அரசு அலுவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும், விளையாட்டுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 15 வீரா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களையும் ஆட்சியா் வழங்கினாா்.
பள்ளி மாணவா், மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், பங்கேற்ற பள்ளிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.ஸ்ரீநாத், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ரேவதி, ஹெச்.வசந்தகுமாா் எம்.பி., என்.சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சித் தலைவா் எஸ்.மொ்லியன்தாஸ், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ஐ.எஸ்.மொ்சிரம்யா, பத்மநாபபுரம் சாா்ஆட்சியா் சரண்யாஅரி, நாகா்கோவில் கோட்டாட்சியா் அ.மயில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மா.சுகன்யா, உதவி ஆட்சியா் (பயிற்சி) க.பிா்தௌஸ்பாத்திமா, அகஸ்தீசுவரம் வட்டாட்சியா் அப்துல்லாமன்னான், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராதாகிருஷ்ணன், உதவி காவல் கண்காணிப்பாளா் ஜவகா், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் விஜயபாஸ்கரன், துணை காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.