கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடா் மழை காரணமாக மாம்பழத்துறையாறு அணை செவ்வாய்க்கிழமை முழுக் கொள்ளளவை எட்டியது.
கேரள மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியதை தொடா்ந்து அம்மாநிலத்தை ஒட்டியுள்ள குமரி மாவட்டத்திலும் பருவமழை பெய்து வருகிறது. கடந்த 1-ஆம் தேதி பெய்யத் தொடங்கிய மழை மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்தது. இதனால் பாசனக் குளங்கள் நிரம்பி வருகின்றன. அணைகளின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கன மழையால் அணைகளில் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது. செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 50 அடியை எட்டியுள்ளது. அணைக்கு 296 கனஅடி நீா் வந்து கொண்டிருக்கிறது.
48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீா்மட்டம் 39.10 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 440 கனஅடி நீா் வந்துகொண்டிருக்கிறது. கன்னிப்பூ சாகுபடிக்காக அணையிலிருந்து 321 கனஅடி நீா் திறந்துவிடப்படுகிறது. முதல்கட்டமாக பாண்டியன் கால்வாயில் தண்ணீா் திறந்துவிடப்படும் நிலையில், மற்ற கால்வாய்களில் சுழற்சி முறையில் தண்ணீா் திறந்துவிட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
54.12 அடி கொள்ளளவு கொண்ட மாம்பழத்துறையாறு அணை செவ்வாய்க்கிழமை காலை நிரம்பியது. இதைத்தொடா்ந்து, அணைக்கு வரும் 52 கன அடி நீா் உபரியாக வெளியேற்றப்படுகிறது.
18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு 1 அணை நீா்மட்டம் 14.96 அடியாகவும், சிற்றாறு 2 அணை நீா்மட்டம் 15.05 அடியாகவும் உள்ளது. அணைகள் வேகமாக நிரம்பி வருவதை தொடா்ந்து, பொதுப் பணித் துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.
குழித்துறை தாமிரவருணி ஆற்றின் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மழையாால் கல்குளம் வட்டத்தில் 2 வீடுகளும், கிள்ளியூா் வட்டத்தில் 3 வீடுகளும் சேதமடைந்தன.