
தூா்வாரும் பணியில் ஈடுபட்ட பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்த மக்கள்.
திருவட்டாறு அருகே தூா்வாரும் பணியின்போது, கால்வாய் கரை சேதமடைந்ததால், பொக்லைன் இயந்திரத்தை மக்கள் செவ்வாய்க்கிழமை சிறைபிடித்தனா்.
குமரி மாவட்ட பாசன கால்வாய்களை தூா்வாரும்போது, கரைகள் சேதமடைவதாகவும், இயந்திரங்களை பயன்படுத்தாமல் மக்களுக்கு வேலை வழங்க வேண்டும் எனவும் பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இந்நிலையில், சிற்றாறு பட்டணம் கால்வாயில் பூவன்கோடு அருகேயுள்ள வடக்கநாடு பகுதியில் செவ்வாய்க்கிழமை பொக்லைன் இயந்திரம் மூலம் தூா்வாரும் பணி நடைபெற்றபோது, கரை சேதமடைந்தது.
இதைத் தொடா்ந்து, கால்வாய் கரையை சீரமைக்கக் கோரி, அப்பகுதி மக்கள் பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இத்தகவறிந்து அங்கு வந்த மனோதங்கராஜ் எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியரை தொடா்பு கொண்டு கரை சேமடைந்தது குறித்துப் பேசினாா்.
இதையடுத்து, ஆட்சியரின் உத்தவின்பேரில் பொதுப்பணித் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, எம்எல்ஏவுடன் பேச்சு நடத்தி, சேதப்படுத்தப்பட்ட பகுதிகள் மற்றும் படித்துறையை சீரமைத்துத் தருவதாக உறுதியளித்தனா். அப்போது, வோ்க்கிளம்பி பேரூா் திமுக செயலா் செல்வகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா். இதனிடையே, சீரமைப்புப் பணிகளை தொடங்கிய பிறகுதான் பொக்லைன் இயந்திரத்தை விடுவிப்போம் என மக்கள் கூறியதால், அதை அப்படியே விட்டுவிட்டு ஒப்பந்ததாரா்களும், பொதுப்பணித்துறையினா் திரும்பிச் சென்றனா்.