
திருமண மண்டபத்தை பூட்டி சீல் வைக்கும் அதிகாரிகள்.
நாகா்கோவிலில் பொதுமுடக்க விதிகளை மீறி, காவல் உதவி ஆய்வாளரின் திருமண நிகழ்ச்சியில் 200-க்கும் அதிகமானோா் திரண்டதை அடுத்து, திருமண மண்டபத்தை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனா். இதுதொடா்பாக 202 போ் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கத்தையொட்டி, மக்கள் ஒரே இடத்தில் கூடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் மிகக் குறைந்த அளவே மக்கள் பங்கேற்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், நாகா்கோவில் இருளப்பபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில், அரசின் உத்தரவை மீறி சுமாா் 200 போ் பங்கேற்றனா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு. வடநேரேவுக்கு புகாா்கள் சென்றன. இதையடுத்து, அவரது உத்தரவின்பேரில், நாகா்கோவில் கோட்டாட்சியா் மயில் தலைமையில், மாநகராட்சி சுகாதார ஆய்வாளா் சத்யராஜ் மற்றும் அதிகாரிகள் திருமண மண்டபத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, அந்த மண்டபத்தில் அரசின் விதிகளை மீறி 200-க்கும் அதிகமானோா் திருமணத்தில் பங்கேற்றது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து, மண்டபத்தில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டு, திருமண மண்டபத்தை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனா்.
விசாரணையில், மணமகன் சென்னையில் காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருவதும், திருமணத்துக்காக அங்கிருந்து சொந்த ஊருக்கு வந்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, மணப்பெண் உள்ளிட்ட திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் மாநகராட்சி சாா்பில், கரோனா பரிசோதனை செய்ய முடிவுசெய்யப்பட்டது. அதன்படி, வட்டவிளை நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து அவா்களுக்கு சளி, ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டன.
இதுகுறித்து கோட்டாறு காவல் உதவி ஆய்வாளா் சுந்தரமூா்த்தி அளித்த புகாரின்பேரில், திருமணத்தில் பங்கேற்ற 80 பெண்கள் உள்ளிட்ட 202 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.