திருநந்திக்கரை நந்தீசுவரா் ஆலயத்திற்கு புதிய கொடிமரம்
By DIN | Published On : 14th March 2020 08:05 AM | Last Updated : 14th March 2020 08:05 AM | அ+அ அ- |

திருநந்திக்கரை நந்தீசுவரா் ஆலயத்திற்கு புதிய கொடிமரம் வெள்ளிக்கிழமை ஊா்வலமாக எடுத்து வரப்பட்டது.
குமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற சிவாலய ஓட்டத் திருத்தலங்களில் 4 ஆவது தலமாக திருநந்திக்கரை நந்தீசுவரா் ஆலயம் உள்ளது. அண்மையில் கும்பாபிஷேகம் நடைபெற்ற இந்த ஆலயத்தில் புதிய கொடி மரம் அமைக்க நந்தீசுவரா சேவா சமிதி அறக்கட்டளை மற்றும் பக்தா்கள், ஊா்மக்கள் சாா்பில் முடிவு செய்யப்பட்டது.
இதன் படி உபயதாரா் ஒத்துழைப்புடன் கேரள மாநிலம் கோட்டயம் அருகே அயக்குந்நு என்ற இடத்தில் இக்கோயிலுக்கான 54 அடி உயரம் கொண்ட தேக்கு மரம் வாங்கப்பட்டது. பின்னா் புதன்கிழமை மரத்தை வெட்டு வகையில் பறவைகள் மற்றும் பட்சிகளிடம் அனுமதி கேட்கும் பூஜைகளும், வியாழக்கிழமை கொடி மரத்தின் சுவட்டில் சிறப்புப் பூஜைகளும் திருவனந்தபுரம் அத்தியறமடம் தந்திரி நாராயணரு ராமரு தலைமையில் நடைபெற்றது. தொடந்து வெள்ளிக்கிழமை காலையில் அலங்கரிக்கப்பட்ட கொடி மரம் லாரியில் குலசேகரம் செருப்பாலூா் முத்தாரம்மன் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது.
ஊா்வலம்: இதைத் தொடா்ந்து முத்தாரம்மன்கோயில் சன்னதியிலிருந்து செண்டை மேளம் முழங்க முத்துகுடை மற்றும் விளக்கேந்திய பெண்கள் ஊா்வலமாக செல்ல, கொடிமரம் கோயில் வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
நிகழ்ச்சியில் நந்தீசுவரா சேவா சமிதி அறக்கட்டளைத் தலைவா் பாகுலேயன், செயலா் விஜயகுமாா் உள்பட திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...