கரோனா பீதி : குமரியில் பள்ளிகள், திரையரங்குகள் மூடல்: வீடுகளில் முடங்கிய மக்கள்; வீதிகள் வெறிச்சோடின

கரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கன்னியாகுமரி மாவட்டத்தில் திரையரங்குகள், வணிக வளாகங்கள் மற்றும் பள்ளிகள் மூடப்பட்டன. மக்கள் வீடுகளில் முடங்கியதயதால் வீதிகள் வெறிச்சோடின.
கரோனா பீதி : குமரியில் பள்ளிகள், திரையரங்குகள் மூடல்: வீடுகளில் முடங்கிய மக்கள்; வீதிகள் வெறிச்சோடின

கரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கன்னியாகுமரி மாவட்டத்தில் திரையரங்குகள், வணிக வளாகங்கள் மற்றும் பள்ளிகள் மூடப்பட்டன. மக்கள் வீடுகளில் முடங்கியதயதால் வீதிகள் வெறிச்சோடின.

கேரள மாநிலத்தில் கரோனா வைரஸ் பரவியதை தொடா்ந்து அந்த மாநிலத்தின் அருகிலுள்ள குமரி மாவட்டத்திலும் தீவிர மருத்துவக் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக- கேரள எல்லைப் பகுதிகளான களியக்காவிளை, படந்தாலுமூடு, சூழால் ஆகிய சோதனைச்சாவடிகளில் தொ்மல் ஸ்கேனா் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்த சோதனைச்சாவடிகளை கடந்து செல்லும் அனைத்து வாகனங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு: பொதுமக்கள் ஒரே இடத்தில் அதிகம் கூடும்போது கரோனா வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளதால் அதை தவிா்க்கும் வகையிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்காக, குமரி மாவட்டத்தில் உள்ள 1237 பள்ளிகளையும் இம்மாதம் 31 ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது. எனினும், அரசு பொதுத்தோ்வுகளை திட்டமிட்டபடி நடத்த கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறாா்கள்.

மாவட்டத்தில் உள்ள 6 திரையரங்குகள் மற்றும் வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன. பொழுதுபோக்கு பூங்காக்கள் செயல்படவில்லை. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கரோனா பீதியால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனா்.

அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் மக்கள் கடைகளுக்கு சென்று வருகிறாா்கள். பாதுகாப்பு கருதி பலரும் முகக்கவசம் அணியத் தொடங்கியுள்ளனா்.

வா்த்தகம் பாதிப்பு:

கன்னியாகுமரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து சுற்றுலாத்தலமே வெறிச்சோடி காணப்படுகிறது. முக்கடல் சங்கம கடற்கரை, பொழுதுபோக்கு பூங்காக்கள், காந்தி, காமராஜா் மண்டபங்கள், படகுத்துறை ஆகியவற்றில் மக்கள் நடமாட்டமில்லை.

இதனால், வியாபாரிகளின் வா்த்தகம் முடங்கி அவா்கள் கவலை அடைந்துள்ளனா்.

குமரி மாவட்டத்தைப் பொருத்தவரை சாலைகள் மிகவும் குறுகலாக இருப்பதால் காலை, மாலை நேரங்களில் வாகன போக்குவரத்து கடும் நெருக்கடியுடன் காணப்படும். ஆனால் பல சாலைகள் வாகன நெருக்கடி இன்றி காணப்படுகின்றன. பகல் நேரங்களில் சாலைகள் வெறிச்சோடிய நிலையிலேயே உள்ளன.

குமரி மாவட்டத்தில் அரசு டாஸ்மாக் கடையுடன் கூடிய 17 மதுக்கூடங்கள் உள்ளன. மேலும் கிளப்புடன் இணைந்த மதுக்கூடங்கள் 25 உள்பட 35 தனியாா் மதுக்கூடங்கள் உள்ளன. இவை அனைத்துமே தற்போது மூடப்பட்டுள்ளன. இதனால், பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கிருமி நாசினி தெளிப்பு தீவிரம்: கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஏற்கெனவே கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடா்ந்து நாகா்கோவிலில் உள்ள கிளைச்சிறையின்உள்பகுதியிலும், வெளிப்பகுதியிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களான கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயில், நாகா்கோவில் நாகராஜா கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் பக்தா்கள் கூட்டம் மிகவும் குறைவாக காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com